கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழக தென் மாவட்டங்கள்

அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரம் திங்கள்கிழமை 2-வது நாளாக தத்தளித்தது. குறிப்பாக, தாமிரபரணி கரையோர பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாயினர். மாநகரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற இடங்களிலும் இன்றும் கனமழை நீடித்தது. மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருப்பதை அடுத்து அணைகளுக்கு வரும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளமாய் வந்து சேரும் தண்ணீர் என்று தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

குடியிருப்புகளைச் சூழந்த வெள்ளம்: பாளையங்கோட்டையில் சேவியர் காலனி, என்.ஜி.ஓ. காலனி, மனகாவலம்பிள்ளை நகர் பகுதிகள், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், கைலாசபுரம், உடையார்பட்டி, வண்ணார்பேட்டை பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சீவலப்பேரி அருகேயுள்ள குப்பக்குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தாமிரபரணி மற்றும் சிற்றாறு வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ளவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.

மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்: தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் தத்தளித்தவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முக்கூடல் அருகே அரியநாயகிபுரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை போலீஸார் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர். வெள்ள பாதுகாப்பு மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபடுத்த ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருந்தது. வெள்ளக்கோயில் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஏற்கெனவே 5 தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ள நிலையில் இன்று மேலும் 8 குழுக்களை சேர்ந்தவர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு: தாமிரபரணி வெள்ளப்பெருக்காால் திருநெல்வேலி சந்திப்பு பகுதி முழுக்க வெள்ளக்காடானது. மீனாட்சிபுரம், கைலாசபுரம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. இந்த வீடுகளில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள ஆற்றுப்பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டது. இந்த வெள்ளம் ஆற்றையொட்டியுள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள்ளும் புகுந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்வான பகுதியிலுள்ள பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள ஆவணங்கள் சேதமடைந்தன.

ஒருவர் உயிரிழப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாட்டத்தில் கனமழையால் குளம் நிரம்பிய நிலையில் இன்று அதன் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. திருநெல்வேலி டவுனிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் 4 மின்கம்பங்கள் அருகிலுள்ள கால்வாயில் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சீதபற்பநல்லூரை அடுத்த காங்கேயன்குளத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் வீடு இடிந்து விழுந்து சிவகுமார் (57) என்பவர் உயிரிழந்தார்.

ரயில்கள் ரத்து: கங்கைகொண்டான்- தாழையூத்து இடையே ரயில் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாகியதாலும், பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாலும் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- ஈரோடு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. இதுபோல் திருநெல்வேலி- தூத்துக்குடி, திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- செங்கோட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது.

கிராமப்புறங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்: திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகனமழையால் கிராமப்புற சாலைகள் பலவும் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும் கிராமப்புறங்களுக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிரதான சாலைகளில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்துள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வண்ணார்பேட்டை வழியாக கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கேடிசி நகர் பாலம் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

33 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம்: மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் மூலம் 33 ஆயிரம் லிட்டர் பால் நாள்தோறும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடுதலாக 2 டேங்கர்கள் பால் மதுரையில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும், 2 டன் பால்பவுடரும் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

-ht