வெள்ளம் காரணமாக ராமேசுவரம் – திருச்செந்தூர் – கிழக்கு கடற்கரை சாலை துண்டிப்பு

காட்டாற்று வெள்ளம் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.

கனமழைக்கு குளத்தூர், வீரபாண்டியபுரம், கொல்லம் பரும்பு கண்மாய்கள் நிரம்பி, கரைகள் உடைந்தன. அருகே உள்ள விளை நிலங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் சுமார் 4அடி உயரத்துக்கு வெள்ளம் செல்கிறது. ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை குளத்தூரையடுத்து வேப்பலோடை பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு, சுமார் 10 அடி அளவுக்கு பள்ளம் உருவாகியுள்ளது.

இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாளையங்கோட்டையில் இருந்து ஓட்டப்பிடாரம், குளத்தூர்,விளாத்திகுளம் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் குளத்தூரை அடுத்த முத்துக்குமராபுரம் பகுதியில் பாலம் சேதமடைந்தது. குளத்தூரிலிருந்து விளாத்திகுளம் செல்லும் சாலையில் பூசனூர் கிராம பகுதியில் அரிப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாலை துண்டிப்பால், குளத்தூரை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முடங்கியுள்ளனர். பால் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. 3 நாட்களாகியும் மின் விநியோகம் இல்லை.

பேரிடர் மீட்பு குழுவினர் குளத்தூர் பகுதிக்கு வந்து, வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் பால் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து, தேவையான மருத்துவ வசதியை உடனடியாக செய்து தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

-ht