இந்தியர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் மாறுபட்ட சிக்கலில் சிக்கி உள்ளது. கடந்த காலங்களில் மஇகா, ஐபிஎப் போன்ற கட்சிகள் வழி ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைமைத்துவம் இருந்து கொண்டு வந்தது. அதற்கு எதிராக கொள்கை இணைப்பு கொண்டவர்கள் மஇகாவுக்கு சவாலாக இருந்தனர்.
எப்படி ஆகினும் ஏதோ ஒரு வகையில் இந்தியர்களை குறிப்பாக நகர்ப்புறம் மட்டுமல்லாமல் நகரங்களுக்கு அப்பால் கிராமப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் இருந்த இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மஇகா இருந்தது.
இன்று அந்த சூழல் முற்றாக மாறிவிட்டது. இப்பொழுது பல்லின மக்களின் கட்சிகள் சிறுபான்மையான இந்தியர்களின் அங்கத்துவத்தை உடைத்து ஒரு வலிமையான சிறுபான்மை அரசியல் கட்சி இருக்கும் சூழலை அகற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியர்களுக்கு அரசியல் குரல் என்பது அவர்களிடையே நிகழும் சந்தர்ப அரசியலால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓடும் அளவில்தான் ஒலிக்கின்றது.
அதே வேளையில் எதிர்க்கட்சிகளில் இருக்கும் இந்தியர்கள் தங்களுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தும் வகையில் குரல் எழுப்புவதும் ஒரு போட்டியாகவே நிகழ்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சமுதாயத்தின் உரிமை செயலாக்கம் தடைபடுகிறது.
இதற்கு மாற்று வழி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும் இளைஞர்கள் ஒன்றுபட இயலுமா மஇகா, ஐபிஎப் போன்ற கட்சிகள் இன்னும் செயலாக்கம் காணும் உந்துதலுடன் இருக்கின்றதா? அல்லது மாற்றுத் தலைமைத்துவம் வழங்க இப்போது இருக்கும் இளைஞர் சமுதாயம் முன் வருமா?
இது போன்ற வினாக்கள் நம் மனதிலே எழுகின்றன. இவற்றுக்கு விடை தேட நாம் ஆரம்பிக்க வேண்டும் ஒரு சிறுபான்மை இனம் ஏதாவது ஒரு வழியில் தனது நிலையை மீளாய்வு செய்து அந்த நிலையை யதார்த்த அரசியல் நிலையோடு ஒப்பிட்டு, எழுச்சி பெற ஒரு புது வழி முறை நமது சமுதாயத்திற்கு அத்தியவசியமாகும் அதை உருவாக்கும் பணியை தொடங்க இளைஞர்கள் முன் வர வேண்டும்.
- – நிழல்