“முழுமை அடைவதற்கு முன் இந்த வெற்றிவிழாவும் நியட் கலைப்பும் ஏன்?”

– முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

நியட்டுக்குப் பாராட்டு. தவறு இல்லை. ஆனால் வரலாற்றைப் பாதியிலிருந்து படிக்கக் கூடாது. முதலில் மக்கள் ஓசை செய்தி வெளியிட்டது. அன்றே மக்கள் ஒசை தேவேந்திரன் என்னை அழைத்து இண்டர்லோக் நாவலைக் கையில் கொடுத்து உங்கள் கருத்தை எழுதுங்கள் என்றார்.

நாவலைப் படித்த நான் “இந்த நாவல் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது” என்று என் கருத்தை மக்கள் ஓசையில் வெளியிட்டேன். தொடர்ந்து சமூக ஆர்வலர் பலரும் குரல் எழுப்பினர். ம.இ.கா கல்வி அமைச்சரைச் சந்திக்கும் முயற்சியில் ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியது.

அதே சமயம் சு.வை.லிங்கம் கிள்ளானில் அனைத்து இயக்கக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். “ம.இ.கா. குழுவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, பொது இயக்கங்களின் பேராளர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தினர் முடிவு செய்தனர்.

அமைச்சரைச் சந்திக்கும் குழுவில் சேர்த்துக் கொள்ள என்னையும் நண்பர் இராஜரத்தினத்தையும் பரிந்துரை செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து ம.இ.கா. தலைவர் ஜி. பழனிவேல் என்னை அழைத்து அந்தக் குழுவில் சேர்ந்து செல்லக் கேட்டுக் கொண்டார்.

நான் அப்போதே என் கருத்தை முடிவாகச் சொன்னேன். பின்னர் சந்திப்புக் குழுவில் சேர்ந்து கொள்ள நானும் நண்பர் சு.வை. லிங்கமும் அழைக்கப்பெற்றோம்.

நான் மலாயாப் பல்கலைக் கழக விரிவுரையாளர் முனைவர் குமரனை அழைத்து அமைச்சரைச் சந்திக்கும் முன் ம.இ.கா. சார்பில் செல்லும் குழுவினர் கூடிப் பேசி ஒத்த கருத்தோடு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மலாயாப் பல்கலைக் கழகத்தில் முனைவர் கூட்டிய கூட்டத்தில் முனைவர் மாரிமுத்து, முனைவர் குமரன், கிருஷ்ணபகவான், சு.வை.லிங்கம் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் “திருத்தங்கள் பயன் தராது. இண்டர்லோக் நாவலைப் பள்ளிகளிலிருந்து மீட்க வேண்டியதற்கான காரணங்களை விளக்கி மீட்க வேண்டும் என்ற முடிவை மட்டுமே வற்புறுத்துவது என்று நாங்கள் முடிவு செய்தோம்.

துணைக்கல்வி அமைச்சரோடு நடந்த சந்திப்பில் நாங்கள் ஐந்து பேரும் ஒத்த கருத்தை உறுதியாகத் தெரிவித்தோம். கல்வி அமைச்சர் ம.இ.கா.வைக் கெஞ்சத் தொடங்கினார். இண்டர்லோக் நாவலில் திருத்தம் செய்யும் முடிவை ம.இ.கா. ஒப்புக் கொண்டு மற்றொரு கல்வியாளர் குழுவை அனுப்பியது. ம.இ.கா.வின் முடிவில் உடன்பாடு இல்லாத நானும் முனைவர் குமரனும் அந்தக் குழுவில் இடம் பெற விரும்பவில்லை.

நான் தொடர்ந்து மலேசியாஇன்றுவில் என் கருத்தை வற்புறுத்தி வந்தேன். இந்த நேரத்தில்தான் நண்பர் அருண் அப்பாதுரை அனைத்து இயக்கங்களின் கூட்டத்தை மலேசிய இந்து சங்கத்தில் கூட்டினார். அப்போது அமைந்ததுதான் நியாட்.

நினைவுக்கு எட்டிய வரை இண்டர்லோக் போராட்டத்தின் தொடக்கம் இதுதான். தொடர்ந்து முறையான போராட்டத்தை முன்னெடுத்த நியட்டின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

என்றாலும் ஒரு விஷயம் இன்னமும் மனத்துக்கு நெருடலாக இருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலிருந்து இண்டர்லோக் இன்னமும் மீட்டுக் கொள்ளப்படவில்லை. கல்வி அமைச்சின் அதிகாரபூர்வமான கடிதம் இன்னும் வரவில்லை என்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். மீட்டுக் கொள்ளும் நடவடிக்கை முழுமை அடைவதற்கு முன் இந்த வெற்றிவிழாவும் நியாட் கலைப்பும் ஏன்? நியட் அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.