கலாசாரத்தை காதலர் தினம் சீரழிப்பதாக கூறி, வட சென்னை இந்து முன்னணி சார்பில், நாய், கழுதைக்கு திருமணம் நடத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
காலை 10 மணியளவில் கொருக்குப்பேட்டை கே.என்.எஸ் டிப்போ அருகே இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் மனோகரன், ஆர்கே நகர் தொகுதி தலைவர் ராஜேந்திரன் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
காதலர் தினத்தை எதிர்த்து அவர்கள் கோஷம் எழுப்பினர். தாங்கள் அழைத்து வந்த ‘ரோமியோ’ என்ற ஆண் நாய்க்கும், ‘ஜூலியட்’ என்ற பெண் கழுதைக்கும் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இதை பார்க்க ஏராளமானோர் கூடினர். நாயை கழுதையின் மீது அமர வைத்து திருமண சடங்குகளை செய்தனர்.
தகவலறிந்து காவல்துறை துணை ஆணையர் கண்ணப்பன் தலைமையில் காவல்துறையினர் அங்கு வந்து போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் 26 பேரை கைது செய்தனர்.
நாயை காவல்துறையினர் விரட்டியபோது, அது தப்பியோடி மறைந்தது. ஆனால் கழுதையை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களுடன் சத்திரத்தில் கழுதையையும் அடைத்தனர். எனினும் பிற்பகல் 2 மணியளவில் அவர்களை விடுவித்தனர்.