தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசிதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி இந்திய ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உள்ள மருத்துவக் காப்பீட்டின் கீழ் தற்போது இலங்கை அகதிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அகதிகள் முகாம்களில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 4 கோடியே 33 இலட்சம் இந்திய ரூபாயையும், அகதிகள் தங்கியிருக்கும் வீடுகளை மேம்படுத்த 20 கோடியே 66 இலட்சம் இந்திய ரூபாயையும், அகதிகளைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக 41 லட்சத்து 60 ஆயிரம் இந்திய ரூபாயையும், அகதி மாணவர் கல்வி ஊக்கத் தொகைக்காக 21 இலட்சம் இந்திய ரூபாயையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் குடிநீர், கழிப்பறை மற்றும் தங்குமிட வசதிகள் மிக மோசமாக இருப்பதாக பல ஆண்டுகளாகப் புகார் கூறப்பட்டுவரும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் பணிமனை வெளியிட்டுள்ள விபரங்களின்படி தமிழகத்தில் உள்ள 112 அதிகள் முகாம்களில் 70 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இது தவிர முகாம்களுக்கு வெளியே 32 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இதில் ஒரு சிறிய தொகுதியினர் போர் முடிந்த பின்னர் இலங்கை திரும்பியுள்ளனர்.