அதிமுகவில் மீண்டும் சசிகலா; பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டார். போயஸ்கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

அவருடன்  கணவர் நடராஜன்,  உறவினர்கள் ராவணன்,  திவாகரன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடராஜன், ராவணன், திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

இந்த  நிலையில் கடந்த 28-ஆம் தேதி  சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.

அவ்வறிக்கையில்; “என் பெயரை பயன்படுத்தி எனது உறவினர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும்  வகையில் செயல்பட்டு சதித் திட்டங்களில் ஈடுபட்டனர் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.  இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தது. நான் ஒரு போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்தவர்களுடனான தொடர்பை துண்டித்து விட்டேன். அவர்களுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அக்காவுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனி அவருக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன்” என்று சசிகலா கூறியிருந்தார்.

இதையடுத்து சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதலஅமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.