மழையில் தத்தளிக்கும் அமெரிக்கா டென்னிஸ் போட்டி

கடந்து இரண்டு நாட்களாக நியூயார்க்கில் பெய்யும் கடும் மழையால் அங்கு நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்கள் இரண்டு நாட்களாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அச்சுற்றில் நடக்கவிருந்த நான்கு ஆட்டங்களின் நிலை இன்னும் தத்தளிப்பாகவே இருக்கிறது. இதில் உலகின் இரண்டாம் நிலை ஆட்ட்காரரான ராஃபாயல் நடால், அண்டி முர்ரே போன்றவர்களின் ஆட்டங்களும் அடங்கும்.
 
நேற்று அமெரிக்க நேரம் 12 மணி மதியத்தில் மைதானங்கள் போட்டிக்கு ஆயத்தபடுத்தப்பட்டு போட்டிகள் தொடங்கின. இதில் நடால் – முல்லர் ஆடிய முதல் ஆட்டத்தில் முல்லர் 3 -0 என்ற புள்ளி கணக்கில் முன்னணி வகித்துக் கொண்டிந்தபோது மழை மீண்டும் வேகமாக பெய்யத் துவங்கியது.

மற்ற அரங்கில் அண்டி முர்ரே – டோனால்ட் யங் ஆட்டமும் 2 -1 புள்ளி கணக்கிலும், அண்டி ரோடிக் – டேவிட் ஃபெரர் ஆடிய ஆட்டம் 3 -1 என்ற புள்ளிக் கணக்கிலும் இருந்தது. மழை மீண்டும் கனத்து பெய்யத் துவங்கியதால் இரண்டாவது நாளாக இவர்கள் தங்கள் ஆட்டத்தை தொடர முடியாமல் பின் வாங்க வேண்டியதாகிவிட்டது. 
 
அமெரிக்கா போட்டி முடிய  இன்னும் இறுதி ஆட்டத்திற்கு நான்கு சுற்றுகளும் நானகு நட்களுமே இருக்கும் பட்சத்தில் இன்னும் இவர்கள் இனி தினமும் ஒவ்வொரு சற்று ஆட்டமும் விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர்.

ஐந்து செட்டுகள் வரை ஆட வேண்டிய கிராண்ட் செலாம் போட்டியான இதில் ஒய்வில்லாமல் தினமும் போட்டியை எதிர்கொள்வது மிகவும் சிரமானதாகும். நடப்பு சாம்பியனான நடால் தன் பட்டத்தை இவ்வருடமும் தக்க வைத்துக் கொள்வாரா என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது.

ஏனெனில் இப்படி கடைசி நாட்கள் விளையாடிய எந்த வீரருமே அமெரிக்க போட்டியை வென்ற வரலாறு இல்லை. ஏற்கெனவே டென்னிஸ் வரலாற்றில் பல சாதனைகள் செய்து வரும் நடால் இப் புதுசாதனையையும் செய்வாரா ? விடை இன்னும் நான்கு நாட்களில் தெரிந்து விடும்.

-யு-