மதுரை ஆதீனமாக செக்ஸ் சாமியார் நித்யானந்தா! இந்து அமைப்புகள் கொதிப்பு!

செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக ஏப்ரல் 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்; “நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள் ஏற்கவில்லை. மடாதிபதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நித்யானந்தாவை நீக்கும் வரை போராடுவோம்” என்றார்.

சைவ சமயத்தை பரப்பும் நோக்குடன் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தை தமிழ் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இதன் 292,வது ஆதீனமாக அருணகிரிநாதசுவாமி இருந்தார். இளைய ஆதீனமாக பல ஆண்டுகள் பணியாற்றி, 291,வது ஆதீனம் மறைந்த பிறகு 1980-ல் ஆதீனம் பொறுப்பை ஏற்றார். சம்பிரதாயப்படி ஆதீனம் ஓலைச்சுவடி பார்த்து இளைய ஆதீனம் தேர்வு செய்யும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஒரு வாரத்திற்கு முன் மதுரை ஆதீனத்திற்கு வந்து சென்றார். இதன் பிறகு சில நாட்களில் மதுரை ஆதீனம் பெங்களூர் ஆசிரமத்திற்கு சென்று தங்கினார். திடீரென்று மதுரை 293,வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

நேற்று காலையில் மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு பட்டம் சூட்டினார். அப்போது நித்தியானந்தாவை புகழும் பாடல்கள் ஒலிபரப்பபட்டன.  விழாவில் மரபுபடி தமிழகத்திலுள்ள வேறு எந்த ஆதீனங்களும் அழைக்கப்படவில்லை.

‘பணம்  கொடுத்தார்’

செக்ஸ் புகார் சாமியார் நித்தியாந்தாவை புதிய ஆதீனமாக நியமித்துவிட்டு விழாவில் பேசிய ஆதீனம்:  “நித்தியானந்தவை ஆதீனமாக தேர்வு செய்தது, நான் செய்த தவத்தின் புண்ணியம். தகுதியானவரை தான் தேர்வு செய்துள்ளேன். நானும், அவரும் தகப்பன், மகன் போல் ஆதீனத்தில் செயல்படுவோம். அவர் எனக்கு அளித்துள்ள பணம், குருவுக்கு செலுத்திய பாதகாணிக்கை.” ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே? என நிருபர்கள் கேட்டதற்கு, “ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர் அவர்,” என மதுரை ஆதீனம் கூறினார்.

இவரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சி தமிழகத்திலுள்ள அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி நித்யானந்தாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே மதுரை ஆதினமான பின்னர் பேசிய நித்தியானந்தா, “மதுரை ஆதீனத்திற்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளேன். மேலும் ரூ.4 கோடி கொடுப்பேன்” என்றார்.