காதலர்கள் ஓட்டம் : உதவியவர்கள் தற்கொலை

காதலர்கள் வீட்டை விட்டு ஓடியதற்கு துணைபுரிந்ததாக, கிராம பஞ்சாயத்தாரால் வீட்டில் சிறைவைக்கப்பட்ட தம்பதி, விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தின் பெரம்பலூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் தனலெட்சுமி. காதலித்து வந்த இவர்கள், சிலநாட்களுக்கு முன் வீட்டைவிட்டு ஓடினர். இவர்களுக்கு உதவியதாக, தனலெட்சுமியின் தோழி சிறுமலர் மீது கிராம பஞ்சாயத்தார் குற்றம் சாட்டினர்.

சிறுமலர் மற்றும் அவரது கணவர் முத்துசாமியை, மலர் என்பவரது வீட்டில் சிறை வைத்தனர். நேற்று இரவு அவர்களை கிராம பஞ்சாயத்தார் விடுவித்தனர். இந்நிலையில், வீடு திரும்பிய அவர்கள், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

கிராம பஞ்சாயத்து தலைவர் இளையராஜா உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தலைமறைவான காதலர்கள் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.