பெர்சே 3.0 பேரணி புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி என பிரதமர் நஜிப் விமர்சித்துள்ளது வேடிக்கையாகவும் அதேவேளை விபரிதமாகவும் உள்ளதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர் கா. ஆறுமுகம்.
கடந்த வெள்ளிக்கிழமை குவா முசாங்கில் ஒரேமலேசியா கேளிக்கை நிகழ்வில் உரையாற்றுகையில், “அது புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி” என ஏப்ரல் 28-ல் நடந்த பெர்சே 3.0 பேரணியை நஜிப் சாடினார்.
இது சார்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் கா. ஆறுமுகம், ” இந்தப் பேரணி கோலாலம்பூரில் நிகழ்ந்தது புத்திராஜெயாவில் அல்ல.” இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் என்ற வகையில், அவரது அந்தச் சாடலை வன்மையாக மறுப்பதாக கூறினார்.
மெர்டேக்கா சதுக்கத்தில் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டதால் பெர்சே 3.0 அதை மீறப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. மேலும் அந்தச் சதுக்கம் அருகில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தவர்கள் மீது முழுவிசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த நடவடிக்கை நீதிமன்ற ஆணைக்கு அப்பாற்பட்டதா என்றும் விசாரனை செய்ய ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உண்மைநிலை இப்படியிருக்கையில், பிரதமரின் சாடல் எட்டாத உவமை கொண்ட நிலையில் பெர்சே 3.0 ஏற்பாட்டாளர்களின் நோக்கம் தேசத்துரோகத் தன்மை கொண்டதுபோல் விமர்சித்துள்ளது வருந்ததக்கது; அப்படி கூறுவது நெருப்போடு விளையாடுவதாகும் என்கிறார் ஆறுமுகம்.
மேலும் கூறுகையில், பெர்சேயின் முக்கிய நோக்கம் தூயமான-நேர்மையான வகையில் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதுதான். அவ்வகையில் தேர்வு செய்யப்படும் அரசாங்கமே மக்களின் பிரதிநிதியாக இருக்கமுடியும். எனவே “வாக்கு பெட்டி” வழியே நாட்டையாள முடியும் என்ற நிலையில் அது தூய்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டு கோலாலம்பூரில் கூடிய 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை நாட்டின் எதிரியாக படம் பிடித்து காட்ட முற்படும் நஜிப்பின் கருத்தை மக்களே பரிசீலனை செய்து முடிவு செய்யட்டும் என்றார் அவர்.