தி.மு.க.,வின் 14வது உள்கட்சி தேர்தல் இம்மாதம் துவங்குகிறது. ஆறு கட்டங்களாக நடக்கும் இத்தேர்தல், ஓராண்டு வரை நடக்கிறது. கிளைக் கழக செயலரில் துவங்கி, கட்சியின் தலைவர் வரை, இந்த ஓராண்டில் நடக்கும் தேர்தலில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு நடக்கும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மே மாத இறுதியில் முடிந்து, அதற்கான படிவங்கள் கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, தேர்தலின் ஒரு பகுதியாக, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி கட்சியின் தலைமை அலுவலகம் உள்ள அறிவாலயத்தில் நடந்து வருகிறது.
தனது 89 வயதில், கட்சித் தலைவர் பதவியை கருணாநிதி 11 முறை சுவைத்து விட்டார். இவரைவிட வயதில் மூத்தவரான, அன்பழகன் பொதுச் செயலர் பதவிக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருந்தும், கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து கருணாநிதி பின் வாங்க மாட்டார் என்றே தெரிகிறது.
தலைமைப் பதவிக்கு போட்டியிடுவீர்களா என, கருணாநிதியிடம் கேட்டபோது, “உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்” என்று கூறுகிறார்.
கருணாநிதியின் வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, தலைவர் பதவியிலிருந்து விலகி, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக உள்ளது.