சாமியார் நித்தியானந்தா தப்பி ஓட்டம்; போலீசார் வலைவீச்சு!

செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் நித்தியானந்தா உள்பட 8 பேர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தாவை தவிர 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக போலீசார் தேடுவதால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா தப்பி ஓடினார்.

தலைமறைவான நித்யானந்தாவை தேடி, தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர். பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்துமா என, முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தலைமறைவாகிவிட்ட நித்தியானந்தாவை பிடிக்க பிடதி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இரவோடு இரவாக, நித்யானந்தா வட மாநிலத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மதுரை ஆதீனம் மூலம் முன்ஜாமின் பெற, நித்யானந்தா தீவிர முயற்சி செய்து வருகிறார். மதுரை ஆதீனம், பிடதி ஆஸ்ரமத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜாமின் கிடைத்த பின், நித்யானந்தா வெளியுலகில் தலை காட்ட முடிவு செய்துள்ளார்.

நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பிடதி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

நித்தியானந்தாவுடன் சென்ற மதுரை ஆதினம் அருணகிரிநாதர் பெங்களூரில் தவித்து வருகிறார். நித்தியானந்தா திடீரென தலைமறைவானதும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளார் அருணகிரிநாதர். மேலும் நித்தியானந்தாவுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா, எப்படி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வது என்ற ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.