இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாம்தான் தங்கள் வேட்பாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது இப்போதைய குடியரசு துணைத்தலைவர் முகமது அன்சாரி ஆகியோரை நிறுத்தலாம் என்ற சோனியா காந்தியின் யோசனையை அடியோடு அவர் நிராகரித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அல்லது முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம் என்று முன்னதாக மம்தா தெரிவித்த யோசனையை ஏற்கவே முடியாது என்று சோனியாவும் நிராகரித்துவிட்டார்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமையே வேட்பாளராக நிறுத்தலாம் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் ஆதரித்தார். ஆனால், சோனியா காந்தி அதையும் ஏற்கவே முடியாது என்று அறிவித்துவிட்டார்.
வியாழக்கிழமை காலையிலிருந்து தில்லியில் அடுக்கடுக்காக நடந்த இந்த நிகழ்ச்சிகளால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது. மம்தா தனது நிலையில் பிடிவாதமாக இருப்பதாகவே தெரிகிறது.