கர்நாடகத்தில் வியாழக்கிழமை ஜாமீனில் விடுதலையான போலிச் சாமியார் நித்யானந்தரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
ராம்நகர் மாவட்டம், பிடதி அருகே அமைந்துள்ள நித்யானந்தர் தியான பீடத்தில் நித்தியானந்தர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிடதி காவல் நிலையத்தில் 2 புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் , முன்பிணை கேட்டு ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்திற்கு புதன்கிழமை வருகை தந்த நித்யானந்தரை கைது செய்தனர்.
சென்னப்பட்டனாவில் அமைந்துள்ள காவலர்கள் பயிற்சி மையத்தில் நித்யானந்தரை காவல்துறையினர் தங்கவைத்தனர். இந்த நிலையில், ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் பிணை கேட்டு நித்யானந்தர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீதிபதி கோமளா முன்பு வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. நித்யானந்தர் தாக்கல் செய்திருந்த பிணை மனுவை கடுமையாக எதிர்த்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் கே.மோகன்குமார், காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
நித்யானந்தர் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் முத்துமலை, இரு வழக்குகளிலும் பிணை வழங்கக்கூடிய குற்றங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, நித்யானந்தருக்கு பிணை வழங்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, நித்யானந்தருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, நித்யானந்தர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நித்யானந்தரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் வேனில் அழைத்துச் சென்றனர். சென்னப்பட்டணாவில் அமைந்துள்ள காவலர்கள் பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நித்யானந்தரை மீண்டும் கைது செய்தனர்.
உள்மாநில பாதுகாப்பு காவல்துறையினர் ஐஜிபி பாஸ்கர்ராவ் தொடர்ந்த வழக்கின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நித்யானந்தரை மீண்டும் கைது செய்து, மாவட்ட மாஜிஸ்திரேட் ஸ்ரீராம் ரெட்டி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைத்து, வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நித்யானந்தர் மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.