பிரபல நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் மரணம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 3.30 மணியளவில் மரணமானார்.

இவருக்கு கடந்த சில மாதகாலமாக மூச்சுத்திணறல் இருந்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து இவர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் இவருக்கு ஏற்பட்டு மாலை 3.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

காக்கா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் தன்னுடைய 6 வயதிலிருந்தே நாடகத்தில் நடித்தவர். இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தது ‘மங்கையர்க்கரசி’ என்ற திரைப்படம். அந்தப்படத்தில் நடித்த போது ஒருமரத்தில் ஏறி காகத்தை பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் காக்கா ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை அவர் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜித்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜயுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள் எனலாம். மாயி படத்தில் வடிவேலுடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் அவரின் வயதையும் மீறி ரசிக்கதக்கவகையில் அமைந்துள்ளன.

காக்கா ராதாகிருஷ்ணனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.