வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம் வழிபாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 24-ம் தேதி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழா காலத்தில், உச்சிகால பூஜைக்கு முன், கட்டளைதாரர்கள் சார்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆனித் திருவிழாவில், உச்சிகால பூஜைக்கு முன், சிவாச்சாரியார்கள் மூலமாக சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகத்தை, நித்யானந்தாவின் சீடர்கள் செய்து வருவதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த பூஜைக்கான சங்கல்பத்தில், நித்யானந்தாவின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் மீதான வழக்குகள் தவிடுபொடியாக வேண்டும் என்றும், மதுரை ஆதீனத்தில் நிரந்தரமாக இளைய சன்னிதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுவதாகத் தெரிகிறது.

சுவேத கேது முனிவரை, எமனிடம் இருந்து நெல்லையப்பர் காப்பாற்றினார் என, திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. அதனால், இக்கோவிலில் கடந்த 2000ம் ஆண்டு முதல், பக்தர்கள் பேரவை அமைப்பினர், “மிருத்யுஞ்சய வேள்வி’ நடத்தி வருகின்றனர். எமனையே வென்ற நெல்லையப்பர், வழக்குகளையும், பல தொந்தரவுகளையும் பொடி பொடியாக்குவார் என்பதால் தான், நித்யானந்தா நெல்லையப்பர் கோவிலைத் தேர்ந்தெடுத்தார் என்கின்றனர் பக்தர்கள்.

இந்தப் பூஜைக்காக, நெல்லையப்பர், காந்திமதி மூலவர்களுக்கு சிறப்பு கும்பங்கள் வைக்கப்படுகின்றன. நண்பகலில் இந்த பூஜைகள் முடிந்த உடன், மாலை நேரத்தில், தெற்குப் பிரகாரத்தில், அம்மன் சன்னிதி செல்லும் வழியில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதி அருகில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை ஆகியவற்றை நித்யானந்தா சீடர்கள் வினியோகிக்கின்றனர்.

TAGS: