“ஆட்சியைக் கைப்பற்ற” சிறுபான்மையினர் முயற்சியா?, மகாதீரின் கருத்து விசமத்தனமானது

-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமை கழகம், ஜூலை 1, 2012.

பெரும்பான்மை இனம் அமைதியாக இருக்கும் போது சிறுபான்மையினர் தெரு ஆர்பாட்டங்கள் வழி ஆட்சியை கைபற்றினால் மலேசியா ஒரு தோல்விகண்ட நாடாகிவிடும் என்று முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது விசமத்தனமானது.
 
சிறுபான்மையினர் பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசுவது அதிகரித்து வருவதையும் மாற்று ஊடகங்கள் அவர்களுக்கு குரல் கொடுப்பதையும் சாடிய மகாதீர் ஜனநாயகம் என்பது அனைத்து மக்களின் குரலாக இயங்க இயலாது என்கிறார். இதற்கு உதாரணமாக அன்மையில் மத்திய மேற்கு நாடுகளில்   எழுச்சிகளுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் பெரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக மகாதீர் கூறியுள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவரது உரை உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக்கிழமைப் பதிப்பில் (மிங்குவான் மலேசியா) செய்தியாக வெளியிடப்பட்டது.
 
இனவாத நடைமுறையில் உள்ளவர்கள் அந்தச் செய்தியை எப்படி உள்வாங்கி நடைமுறை படித்துவார்கள் என்பதை நாம் அறிவோம். மகாதீரின் காலத்தில் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட இனவாத ஜனநயாகம் நாட்டை நிலைத்தன்மையுடன் வைத்திருந்ததில் பெருமை கொள்ளும் மகாதீர், அது தொடரப்பட வேண்டும் என்பதையே உபதேசிக்கிறார்.
 
மகாதீரிசம் போன்ற ஆதிக்கங்கள் இன்று உலகில் கிடையாது. அவை போன்றவை உண்டாக்கிய இனவாத அரசியலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் உலகளவில் பலத்த முரண்பாடுகளை மக்களிடையே உண்டாக்கியுள்ளன.
 
இனவாதத்தின் மூலம் நாட்டு மக்களை கூறுபோட்டு, பெரும்பான்மை இனத்தை பலப்படுத்த அவர்களுக்கு எதிரி சிறுபான்மையினர் என பயமுறுத்தி, ஆதிக்க அரசியல் மூலம் நாட்டையும் நிர்வாகத்தையும் கைப்பற்றி ஆட்சி செய்தவர் மகாதீர். அதிகாரம்தான் நாட்டின் நிலத்தன்மையை உறுதி செய்யும் என்பது அவரது சித்தாந்தம்.
 
இதுபோன்ற தலைவர்கள் இன்று உலகில் கிடையாது. காரணம் அவ்வகையில் அதிகாரம் பெற்ற அனவருமே தாங்கள் பிரதிநிதித்த இனங்களிடையே பலத்த பொருளாதார வேறுபாட்டை உருவாக்கினர். ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான வேறுபாடு தொடர்ச்சியாக அதிகரித்தது.
 
உதரணமாக மக்களிடையே உள்ள பொருளாதார வேறுபாட்டை குறிக்கும் கின்னி குறியீடு (Gini Coefficient)  1990 இல் 44 ஆக இருந்தது. மகாதீரின் ஆட்சி 2003 இல் முடியும்போது அக்குறியீடு 46 ஆக அதிகரிதிருந்தது. இந்தக்குறியீடு சமத்துவமான நிலயில் 0 என்றும் அனத்து பொருளாதரமும் ஒருவர் கையில் என்றால் 100 என்றும் கணிக்கப்படும். எனவே அவரது ஆட்சியின் போது ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான வேறுபாடு அதிகரித்ததுள்ளதை உணரலாம்.
 
மேலும் 10 வது மலேசியத் திட்ட அறிக்கையின்படி, 2009 இல் நமது நாட்டில் உள்ள குடும்பங்களில் 40 விழுக்காட்டினர் (24 லட்சம் குடுப்பங்கள்) ரிம 2,300 குறைவாக மாத வருமானம் பெருகின்றனர். இவர்களது சாரசரி குடும்ப வருமானம் ரிம 1,440 மட்டுமே.
 
அதேவேளையில் தனிநபர் வருமானம் 1970 இல் ரிம 1,159 ஆக இருந்தது 2011 இல் ரிம 28,000 மாக உயர்ந்துள்ளதாக பிரதமத்துறை அமைச்சர் நூர் முகமட் யாக்கோப் கடந்த பிப்ரவரி மாதாத்தில் அறிவித்தார். நாட்டின் தனி நபர் வருமானம் 24 மடங்குக்கு அதிகமாக உயர்ந்திருந்தும் 
நமது நாட்டின் 40 % குடுப்பத்தினரின் சராசரி வருமானம் ரிம 1,440 மட்டுமே.
 
மலேசியர்கள் விழித்துக்கொண்ட நிலையில் முன்னெடுக்கும் விழிப்புணர்ச்சி என்பது பதவியை கைப்பற்ற அல்ல, நாட்டு மக்கள் நாட்டின் வளத்தில் பங்கு பெற்று சுபிட்சமாக வாழத்தான். இதில் பெரும்பான்மை இனமும் சிறுபான்மை இனங்களும் ஒன்றாகியுள்ளன. நிலத்தன்மை என்று கூறி மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்க முற்படும் மகாதீரின் கருத்து பழமையானது, அதை அவர் கையாளும்விதம் விசமத்தனமானது.