இந்தியர் ஏழ்மைக்கு சீர்திருத்த செயலாக்கமே தேவை, தீயணைப்பு வழிமுறையல்ல!

புதிதாக மக்கள் கூட்டணி நாட்டை தேர்தலில் வென்று, அன்வார் பிரதமரானால் கூட இந்தியர்களின் ஏழ்மை அகலாது. அதற்கு சீர்திருத்த செயலாக்கம் தேவை என்கிறார் கா. ஆறுமுகம்.

மலேசியாவில் இன்றும், இனி என்றும் பணக்காரர் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து அப்படியே இருக்கவும்தான் நமது நாட்டுக்கொள்கைகள் உள்ளன. இதில் மற்ற இனங்களை விட இந்தியர்கள்தான் பெரும்பான்மையில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்கிறார் சுவராம் மனித உரிமை கழகத்தலைவருமான வழக்கறிஞர் ஆறுமுகம்.

ஏழ்மை என்பது சொத்துடைமையில் ஆரம்பம்மாகிறது. உலகம் அனைவருக்கும் சொந்தம் என்றாலும், அதன் இயக்கத்தில் சொத்துடைமை அற்ற மனிதன் தனது உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு உயிர் வாழ முடியும்.

நமது நாட்டில் எங்கு எப்படி பணத்தை சுரண்டுவது என்பதைத்தான் அதிகாரம் உள்ள அரசியல்வாதிகள் செய்கிறார்கள். ஆனால் கொள்கை அளவிலும் அமுலாக்க வகையிலும் சட்டமாகவும் பூமிபுத்திராக்களின் சீர்திருத்த செயலாக்கம் உள்ளது. அது இப்போது ஆலமர விழுதுகள் போல் படர்ந்துள்ளது. சீனர்களின் சொத்துடைமையும் அவர்களது தனிமைபடித்தப் பட்ட சுயதேவை பொருளாதரமும் அவர்களது சூழலுக்கு ஏற்புடையதாக உள்ளது. இந்தியர்களின் நிலை இவற்றிலிருந்து முற்றாக மாறுபட்டது என்கிறார் ஆறுமுகம்.

கடந்த ஜுன் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜியாங் ஜென் கேள்விக்கு கிடைத்த பதிலின்படி மலேசியர்களின் மாதந்தர தனிநபர் வருமானம் 2009 இல் ரிம 1,168 ஆகும். இதில் கீழ்மட்டத்தில் உள்ள 40 விழுக்காடினரின் தனிநபர் வருமானம் ரிம 404, மத்திய நிலையில் உள்ள 40 விழுக்காட்டினர் ரிம 1,056, மேல் மட்டத்தில் உள்ள 20 விழுக்காட்டினர் ரிம 3,124 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி கீழ்நிலையில் உள்ள 40 விழுக்காடு மலேசியர்களுக்கு கிடைக்கும் வருமானம் மத்திய வர்கத்தைவிட 2.6 மடங்கு குறைவாகவும் மேல்நிலை மக்களை விட 7.7 மடங்கு குறைவாகவும் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது சுமார் 70 விழுக்காட்டு இந்தியர்கள் இந்த கீழ்நிலையில் உள்ளவர்களாவர்.

ஏழ்மை இந்தியர்களின் பொருளாதார வரலாறு தோட்டபுற மேம்பாட்டுக்காக குறைந்த நாள் சம்பள முறையின் கீழ் தனியார் நிறுவனங்களுக்காக உழைப்பதில் பிணைக்கப்பட்டது. 1970 இல் சீர்திருத்த செயலாக்க முறை புதிய பொருளாதார திட்டத்தின் வழி கொண்டுவரப்பட்ட போது ஏழ்மை இந்தியர்கள் தனியார் தோட்டங்களில் வாழ்ந்ததால் ஒதுக்கப்பட்டனர். அதன் பிறகு மேம்பாட்டுத்திட்டங்களால் விரட்டப்பட்ட இவர்கள் தங்களின் சுயவாழ்வை நாட்டின் பொருளாதார மேம்பாட்டோடு இணைக்கப் போரடி வருகின்றனர்.

மாறுபட்டு வருகின்ற மலேசியாவின் சமூக பொருளாதார நிலைமை இந்தியர்களின் ஏழ்மையை மேலும் மோசமாக்கும் எனவே அவர்களுக்கு சீர்திருத்த செயலாக்கமே வழிமுறை என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

மேலும் விளக்கையில், “நமது நாட்டின் பணப் பட்டுவாட மிகவும் அதிகமாகி விட்டது. விலைவாசிகள் தாறுமாறாக ஏற்றம் கண்டுள்ளன. மத்திய அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் உள்நாட்டு கடனாக ரிம 1,900 கோடியை பெற்றது. 1970 இல் ரிம 2,660 கோடியாக இருந்தது தற்போது ரிம 4,560 கோடியாக அதிகரித்துள்ளது”.

“அதேவேளையில் ஏழை பணக்காரக்களிடையே உள்ள வேறுபாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் மக்களின் பண பட்டுவாட சக்தியை அதிகரிக்க குறைந்த வட்டியின்வழி பலவகையான கடன் பெரும் சூழலை அரசாங்கம் உண்டாக்கியது” என்கிறார்.

மக்கள் வருமானம் பெறுவதில் அதிகமான மாற்றம் இல்லை. ஆனால் மக்களின் சராசரி குடும்பக் கடன் வருமானத்தைவிட 140 விழுக்காடு அதிகமாக உள்ளது. “கல்விக் கடன், வீட்டுக்கடன், கார் கடன், வாடகை இப்படி நம்மில் ஏறக்குறைய அனைவருமே கடனில்லாமல் வாழ இயலாத சூழலில் உள்ளோம்” இந்நிலையில் மத்திய அரசாங்கம் நமக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு, சீனி, எண்ணெய், மாவு மற்றும் அத்திய வசியப்பொருட்களுக்கு சப்சிடி என்ற உதவிப் பணம் வழி விலையை கட்டுப்படுத்தி வருவதாக கூறுகிறது.

இந்த கட்டுபாட்டை நீக்கினால் விலைவாசி விஷம் போல் ஏறும். மேலும் மத்திய அரசாங்கம் வாங்கியுள்ள கடனை கட்டுப்படுத்த அது தனது பொறுப்புகளை தனியார் மயமாக்குகிறது, விற்பனை வரி விதிக்கின்றது.
“உண்மை இப்படி இருக்கையில், இந்தியர்களுக்கு பிரச்சனை உள்ளதாக வெளிப்படும் தருணங்களின் உதவிப் பணங்களையும், திடீர் அறிவிப்புகளையும் செய்து அதன்வழி அவர்களை சாந்தப்படுத்த முயலுகிறது மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும். இதைத்தான் தீயணைப்பு வழிமுறை என்பர்”

இந்த வலையில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் தங்களது ஏழ்மை நிலையிலிருந்து வெளிவர இயலாது. அவர்களது கடன் தொடர்ந்து அதிகரிக்கும்; சமூக பிரச்சனைகள் அதிகரிக்கும். இதை நிவர்த்தி செய்ய ஒரே வழி அரசாங்கத்தின் நேரிடையான பங்கெடுப்பு அவசியம். அதை சீர்திருத்த செயலாக்கம் வழி பூமிபுத்திராக்களுக்குச் சிறப்பாக செய்துள்ள அரசாங்கம் இந்தியர்களுக்கு அமுல்ப்படுத்த வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம்.

வருமான வேறுபாடு

 

கடன் / உள்நாட்டு உற்பத்தி ஒப்பீடு