ஒலிம்பிக் போட்டியின் தங்கப் பதக்கத்தின் கதை

[தொகுப்பு: தானப்பன், விளையாட்டுக்களின் கதை]

ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவதாக வருபவருக்கு தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படுகிறது என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால், தங்கப்பதக்கம் எவ்வாறு தோற்றமும் மாற்றமும் பெற்றது, பெற்றிருக்கிறது என்னும் வரலாற்றை இங்கு நாம் காண்போம்.

முற்காலத்தில் கிரேக்க நாட்டில் நடைபெற்ற பழைய ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியடைந்த ஒரு வீரனுக்குப் பரிசாகக் கிடைத்தது புனித ஆலிவ் மரத்தில் இருந்து பெற்ற இலை தழைகளால் பின்னப்பட்ட மலர்க்கிரீடமாகும்.

அதன்பின், வெற்றி வீரனைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடல்கள் பாடி பாமாலை சூட்டினர். சிற்பிகள் அவனைப்போல் சிலை வடித்து சிறப்பித்தனர். நினைவுச் சின்னங்களும் எழுப்பி வீர வணக்கம் செய்தனர் மக்கள். அவர்கள் காலம் மாறியது. புனித மலர்வளையத்திற்குப் பதிலாகப் பொருள்களின் மீது வீரர்களுக்கு மோகம் பிறந்தது. அதன் பயனாக, வெள்ளித் துண்டுகள் விழாக்காலங்களில் மின்னிமேன்மை தந்தன.

புதிய ஒலிம்பிக் போட்டி தோன்றியது. 1896-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் முதன்முதலாக நடத்தப் பெற்ற போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற வீரனுக்கு வெள்ளிப் பதக்கமும், ஆலிவ் மலர்க்கிரீடமும் வழங்கப்பட்டது. இரண்டவதாக வந்த வீரனுக்கு வெண்கலப் பதக்கமும் மலர்க்கிரீடமும் வழங்கினார்கள். அத்தகைய பதக்கங்களுக்கு வடிவம் தந்தவர் பிரான்சு நாட்டுக் கலைஞர் ஜுல்ஸ் சேப்ளென் என்பவர். தோற்றத்தை அளித்த அந்தக் கலைஞரின் பதக்கங்களை அதே வடிவத்தில் தொடராமல் விட்டு விட்டார்கள். காரணம், செய்த பதக்கத்தினை மேலும் செழுமை செய்வதற்குத்தான்.

1900-ம் ஆண்டு பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. பதக்கங்களுக்குப் பதிலாகக் கலையம்சம் நிறைந்த கலைப்பொருட்கள் (Art objects) பரிசாக வழங்கப்பட்டன. பந்தயங்களில் பங்கு பெற்ற வீரர்கள் அனைவருக்கும் நினைவுக் கொள்ளத்தக்க வகையில் அடையாளச் சின்னங்கள் (Badges) அளிக்கப்பட்டன.

1904-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள செயிண்ட் லூயிஸ் என்னுமிடத்தில் பந்தயம் நடைபெற்ற பொழுது, உலகக் கண்காட்சியும் அதே சமயத்தில் நடைபெற்றதால், ‘1904- உலகக் கண்காட்சி ஒலிம்பிக் போட்டிகள்’ என்று எழுதப் பெற்ற பதக்கங்கள் வெற்றி வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

தொடக்கத்திலிருந்தே தங்கப்பதக்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் இவ்வளவு தான் எடை இருக்க வேண்டும், 30லிருந்து 50 மில்லி மீட்டர் விட்டத்திற்குள்ளாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த விதமான விதிமுறைகளுக்கும் உட்படாமலேயே தயாரிக்கப்பட்டு வந்தன. அதே சமயத்தில், உழைத்து, உருவாக்கும் கலைஞர்களும் அடிக்கடி மாறிக் கொண்டே வந்தனர். ஆமாம்! நாட்டுக்கு நாடு பந்தயங்கள் மாறும்பொழுது, அந்தந்த நாட்டுக் கலைஞர்கள் அவர்களது பாணியில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

1908-ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபொழுது, பெர்ட்ரம் மெக்கன்னல் (Bertram Mackennal) எனும் ஆங்கிலக் கலைஞர், இரண்டு இளம் நங்கையர் ஒரு வெற்றி வீரனுக்குக் கீரிடம் அணிவிப்பது போல் அமைத்த பதக்கங்களை ஆக்கித் தந்தார். ஆனால், 1912ஆம் ஆண்டு சுவீடன் ஸ்டாம்கோம் நகரில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, பதக்கத்தின் வாசகமும் உருவங்களும் மாற்றம் பெற்றன.

எரிக்லிண்ட் பெர்க் எனும் கலைஞர், சுவீடன் நாட்டின் உடற்கல்வி முன்னேற்றத்திற்குக் காரணகர்த்தாவாக விளங்கிய லிங் என்பவர், சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற அமைப்புடன் தங்கப்பதக்கத்தின் ஒரு புறத்தை அலங்கரித்து வைத்தார். அந்த அமைப்பும் 1924ஆம் ஆண்டு ஆண்ட்வெர்ப் என்னுமிடத்தில் ஒலிம்பிக் பந்தயம் நடந்தபோது மாறிப் போனது.

1924-ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் மீண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற பொழுது, கலைஞர்களுக்கிடையே தங்கப்பதக்கத்தில் பொறிக்கும் சின்னம் பற்றிய போட்டி ஒன்றை நடத்தினர். அதில் ஆன்டிரி ரிவாட் (Andre Rivad) எனும் கலைஞர் வென்றார். அவர் பல தரப்பட்ட விளையாட்டுச் சாமான்களை அழகுற அடுக்கிவைத்து உருவாக்கிய சித்திரம் தங்கப்பதக்கத்தில் இடம் பெற்றது.

1928-ம் ஆண்டு நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற பொழுது, முன்னர் விளங்கிய தங்கப்பதக்க ஓவியம் தவிர்க்கப்பட்டது. பிளோரண்டைன் நகர ஓவியக் கலைஞர் கியூசெபா காசியோலி (Giuseppa Cassioli) என்பவர், ஓர் அழகான பெண் உருவை வரைந்தளித்தார். அந்தப் பெண் வடிவமானது. சகோதரத்துவம், சிநேகிதத்துவம், ஒற்றுமை என்பனவற்றைப் பிரதிபலிக்கும் சின்னம் என்றும் விரிவுரையளித்தனர்.

இந்தச் சின்னம் தாங்கிய தங்கப்பதக்கம், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கும் வழங்கப்பட்டதுதான் இப்போட்டியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியாகும்.

அதன் பின்னர், அதே பெண்ணுருவைத் தாங்கிய அதே நேரத்தில் போட்டிகளை நடத்திய நாட்டின் பெயர், ஆண்டுப் பொறித்த தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

1928-ம் ஆண்டிலிருந்து ஒரு புறத்தில் மங்கையுருவம் தொடர்ந்து பதிக்கப்பட்டிருக்க, மறுபுறத்தில், அந்தந்த நாட்டின் கருத்துக்கேற்ப சித்திர அமைப்பு வேறுபட்டு வந்து கொண்டிருக்கிறது, அந்த நிலையான உருவினை அமைத்துத் தந்த கியூசெபா காசியோலி எனும் கலைஞர் உலகின் பாராட்டுக்குரியவராகத் திகழ்கின்றார்.

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற பந்தயங்களுக்கான பதக்கங்களில் ஒருபுறம் மங்கை வடிவம். மறுபுறம் ஓடுகளத்தின் படம். ஒலிம்பிக் சுடர் எரியும் பாத்திரம் மற்றும் மாஸ்கோ ஒலிம்பிக் கழகத்தின் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்டிருந்தது. இதனை உருவாக்கித் தந்தவர். இல்யா பாஸ்டல் (IIya Postol) எனும் ரஷ்யராவார்.

தங்கப்பதக்கம் உருவம் பெற்ற நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோற்றத்தில் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தது, இதில் ஈடுபட்டோரின் ஈடிலா பற்றினையும் பாசத்தினையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கிறது.

தோன்றியிருக்கும் விளையாட்டுக்களின் தொடக்கம் எல்லாம், மனித இனத்தை மகிழ்ச்சியுள் ஆழ்த்துவதற்காகவும், மனிதாபிமானத்தை வளர்த்து, மட்டற்ற இன்பத்தையும் பண்புகளையும் உருவாக்கி உய்விக்கவும்தான் என்கின்ற கருத்துக்களையே நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய அரிய இலட்சியங்களை நாம், நம் இதயத்தில் பதித்து எண்ணத்தில் விளைத்து, செயலில் பிரதிபலித்து மகிழ்வோமாக! பிறரையும் மகிழ்விப்போமாக!