பீய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் நேற்று உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார்.
பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தேர்வு பெற்றார். பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா அழகி இவியன் சார்கோஸ் தனது தங்க கிரீடத்தை சீனா அழகி வெண் சியா யுவுக்கு சூட்டி மகிழ்ந்தாள்.
இசை பயிலும் மாணவியான 23 வயது உலக அழகி வெண் சியா யு தான் ஒரு இசை ஆசிரியையாக வர விரும்புவதாக அப்போது கூறினார். வேல்ஸ் அழகியான சோபி மோல்ஸ் இரண்டாவதாகவும், ஆஸ்திரேலியா நாட்டின் அழகி ஜெசிக்கா கஹவாட்டி மூன்றாவது அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டு பட்டங்கள் சூட்டப்பட்டனர். இந்திய அழகி வண்யா மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் ஏழாவதாக வந்த இந்திய அழகி வண்ய மிஸ்ரா சமூக ஊடக அழகியாகவும், நோக்க அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இறுதி சுற்று போட்டியில் கலந்து கொண்ட அழகிகளிடம், அடுத்த உலக அழகியாக தேர்வாவதற்கு என்ன தகுதி வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இந்திய அழகியான வண்ய மிஸ்ரா ஒரு பெண் தான் செல்லுமிடங்களில் அவளுக்கே உரித்தான அன்பான இதயத்துடனும் அடக்கத்துடனும் இருக்கிறாள் என்ற உணர்வை வெளிப்படுத்தும் படியாக அடுத்த மிஸ் வேர்ல்ட் இருக்கணும் என்று பதிலளித்து இருந்தார்.
கடந்த 2000 ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் இந்தியாவின் ப்ரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.