சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் : இந்திய மத்திய அமைச்சர்

டெல்லி: தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் இந்தியாவில் இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரல்.

தமிழகத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

“நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும், இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். இதற்கு பதில் அளித்த, இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய், “முதல்வரின் கோரிக்கையை, இராணுவ அமைச்சகம் பரிசீலித்து வருகிறது'” என, கடந்த இரு நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக எதிர்ப்பு குறித்து பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளதாவது:

“இலங்கை நமது நட்பு நாடு. அதனால் அதன் ராணுவ வீரர்களுக்கு நமது ராணுவ நிலையங்களில் தொடர்ந்து பயிற்சி அளிப்போம். இதற்கு மாநில அரசுகளிடம் இருந்து சில நேரங்களில் ஆட்சேபனை எழலாம். அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்” என்றார் அவர்.

TAGS: