தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக் காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலைப் பரிமாற்ற நிகழ்வு ஒன்றுக்காக இலங்கையில் இருந்து சென்ற பள்ளிக்கூட மாணவர்கள் அங்கு ”நாம் தமிழர் இயக்கத்தினரால்” நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நிகழ்வின் இடைநடுவில் வெளியேற நேர்ந்திருக்கிறது.
இலங்கையைச் சேர்ந்த இரு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் இந்த இரு நாள் நிகழ்வில் கலந்துகொள்ள அங்கு வந்திருந்ததாகவும், ஆயினும் அங்கு அவர்களது வருகைக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களை தாம் திருப்பி அனுப்ப நேர்ந்ததாகவும், இந்த நிகழ்வால் தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும் கலைக்காவேரி நிறுவனத்தின் அதிபரான அருட் சகோதரி மார்கிரட் பாஸ்ரின் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்திருந்த சுமார் 70 மாணவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை அரசாங்க தரப்பினர் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாகவே தாம் அந்த மாணவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி அவர்களை அந்த கலைப் பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொள்ள விடாமல் செய்ததாக நாம் தமிழர் இயக்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளரான பிரபு கூறினார்.
சிங்கள இராணுவத்தினர் தமிழ் மாணவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான பதில் நடவடிக்கையாகவே தாம் இதனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.