அதிக உயரத்திலிருந்து ஒலியை விட வேகமாக தரையில் குதித்து சாதனை!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாரசூட் வீரரான ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் வானில் மிக அதிக உயரத்திலிருந்து தரையில் குதித்தவர் என்பதற்கான உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

தரைக்கு சுமார் 39 கிலோமீட்டர் உயரத்திலிருந்து பலூன் கலம் ஒன்றிலிருந்து குதித்து இவர் தரைக்கு வந்தார். அவ்வாறு கீழே வரும்போது ஒலி பயணிக்கும் வேகத்தைவிட வேகமாக இவர் கீழே வந்த முதல் நபர் என்ற சாதனையை பாம்கார்ட்னர் படைத்ததாக அவரது குழுவினர் கூறுகின்றனர்.

கீழே வந்துகொண்டிருக்கும்போது தன்னுடைய தலைக்கவசத்தின் கண்ணாடி உறைந்து பூத்துப்போனதால் சாதனை முயற்சியைக் கைவிட்டுவிட்டு பாராசூட்டை சீக்கிரமாகவே விரித்துவிடலாம் என்ற ஒரு முடிவை தான் நெருங்கியதாகவும், ஆனால் நிலைமையை சமாளித்துக்கொண்டு தொடர்ந்து கீழே வந்ததாகவும் நியு மெக்ஸிகோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பாரசூட்டை விரிப்பதற்கு முன்பாக கீழே தான் அத்தனை வேகத்தில் கீழேவந்தபோது உடல் சுழலாமல் கட்டுப்படுத்திக்கொள்ள தான் மிகவும் திணறிப்போனதாக அவர் தெரிவித்தார்.

போனவாரமே இவர் இந்த சாதனையை நிகழ்த்துவதாயிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் முயற்சியை ஒத்திப்போட வேண்டிவந்தது. இதற்கு முன்னர் 1960 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப் படையைச்சேர்ந்த கர்ணல் ஜொய் கிட்டிங்கர் 31.3 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து பூமியை நோக்கி குதித்ததுதான் இதற்குமுன் உலக சாதனையாக இருந்து வந்தது.

அவருக்குப்பிறகு பலர் அவரது சாதனையை முறியடிக்க முயன்றும் முடியாமல் இருந்துவந்தது. இந்த முயற்சியில் சிலர் உயிரிழந்த துயரங்களும் நடந்திருக்கின்றன.

நாசா உதவியுடன் பாம்கார்ட்னர் நடத்திய சாகச முயற்சிக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜொய் கிட்டிங்கர் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறப்புக் கருவிகள்

மிதக்கும் பலூனில் இணைக்கப்பட்டிருக்கும் கலனில் அமர்ந்தபடி வான்வெளி மண்டலத்திற்கு சென்ற ஃபெலிக்ஸ, அங்கே முப்பத்தி ஆறரை கிலோமீட்டர் உயரம் சென்றதும் தான் இருக்கும் கலத்தின் கதவு திறந்து கீழே குதித்தார். அவர் குதிக்கத் துவங்கும் வான்வெளியில் காற்றின் அடர்த்தி பூமியின் கடல் மட்டத்தில் இருப்பதை ஒப்பிடும்போது வெறும் இரண்டு சதவீதம்தான்.

அதன் விளைவாக அங்கே காற்றில் ஆக்சிஜனின் அளவு மிகக்குறைவாகவே இருந்தது. அதனால் இவர் குதித்தபோது அவரது உடலில் கட்டப்பட்டிருக்கும் ஆக்சிஜன் கலத்திலிருந்துதான் சுவாசித்தார். அதைவிட முக்கியமாக, அவர் குதித்த உயரத்தில் குளிர் மைனஸ் முப்பது செல்ஷியஸ் ஆகும்.

இத்தனையையும் எதிர்கொண்டு அவர் கீழே குதிக்கும்போது அவர் மணிக்கு சுமார் 1110 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்தார். இந்த வேகத்தில் அவர் வந்தபோது அவரது உடலில் பல்வேறு விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும் அவற்றை தாங்கி அவரது உடலை பாதுகாக்கும் வகையில் அவரது உடற்கவசம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பலூனில் ஏறி ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் மேல் நோக்கி பயணித்து 39 கிலோமீட்டர் உயரத்தை அடைந்த ஃபெலிக்ஸ், அங்கிருந்து இருபது நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் தரையை வந்தடைந்தார்.