கல்லறைத் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட பிரபலங்கள்

விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே தற்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. ஆனால் வேறு பல தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஆலிவர் கிராம்வெல்

இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஒரு குறுகிய காலத்துக்கு கொண்டு வந்தவர் ஆலிவர் கிராம்வெல். படை வீர்ராகவும், ராஜ தந்திரியாகவும் திகழ்ந்த இவர் 1658 ஆம் ஆண்டு மரணித்தார். அரச மரியாதையுடன் அவரது உடல் புகழ் பெற்ற வெஸ்ட்மினிஸ்ட்டர் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு இவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தலை வெட்டி சிதைக்கப்பட்டது. பிறகு அவரின் உடல் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் ஒரு கொலை களத்தின் அருகே வீசப்பட்டது. ஆலிவர் கிராம்வெல்லின் தலை ஒரு கம்பில் கட்டப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் ஹாலின் மாடியில் வெளியில் தெரியும் படி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலை 1815 இல் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இது ஆலிவர் கிராம்வெல்லின் தலை என்றே உறுதிப்படுத்தப்பட்டது.

சார்லி சாப்ளின்

புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நடிகர் சார்லி சாப்ளின் தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை சுவிட்சர்லாந்தில் கழித்தார். அவர் இறந்த பிறகு கோசிய சூர் வேவி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டார். இரண்டு திருடர்கள் 1978ஆம் ஆண்டு அவரின் உடலை அங்கிருந்து தோண்டி எடுத்துச் சென்றனர். பெரும் பணம் கொடுத்தால்தான் உடலைத் தர முடியும் என்று அவர்கள் சார்லி சாப்ளினின் வழக்கறிஞர்களோடு பேரம் பேசினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு போலந்து மற்றும் பல்கேரியாவில் இருந்து அகதிகளாக வந்திருந்த அந்த இரு திருடர்களும் பிடிபட்டனர். சார்லி சாப்ளினின் உடல் மீட்கப்பட்டது அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது. ஆனால் இரவில் யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்ற நோக்கில் சார்லி சாப்ளினின் கல்லறை இம்முறை கான்க்ரீட்டால் மூடப்பட்டது.

கிறிஸ்டபர் கொலம்பஸ்

அமெரிக்க கண்டத்துக்கு கடல் வழி கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் நிலை இன்னமும் மோசமானது. தனது உடலை அமெரிக்காவில் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார். ஆந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலங்கள் இல்லை. எனவே அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது. அதன் பிறகு சிவைல் மாடாலயத்துக்கு அது மாற்றப்பட்டது. 1542 ஆம் ஆண்டு அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில் ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கியுபா 1898ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு கொலம்பஸ் அவர்களின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து சேவைலில் இருக்கும் தேவாலயத்துக்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடல் குறித்த அதிகார பூர்வ வரலாறு இப்படி இருக்க – டொமினிகன் குடியரசின் தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து சில எலும்புகள் எடுக்கப்பட்டன. அவை அங்கே கொலம்பஸ் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் சீவைலில் அருகே புதைக்கப்பட்ட கொலம்பஸ்சின் சகோதரர் டிகோவின் டி என் ஏவும் அங்கே புதைக்கப்பட்ட கோலம்பஸ்சின் உடல் என்று கருதப்படும் உடலின் டி என் ஏவும் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேரி கியுரி

இயற்பியலுக்கு ஒன்று வேதியலுக்கு ஒன்று என இரண்டு நோபல் பரிசுகளை வென்றவரான மேரி கியுரி மற்றும் அவரது கணவரின் அஸ்தி பிரான்சின் உள்ள ஒரு சாதாரண கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு பாரிஸில் உள்ள பான்தியன் என்ற இடத்துக்கு 1995 ஆம் மாற்றப்பட்டுள்ளது.

சேகுவேரா

அர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது. சே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது.

-BBC