“…நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகமே இல்லை”, ஜி.பழனிவேல்

இந்த நாட்டின் இன்றையக் குடிமக்களின் அடித்தளம் வந்தேறிகள். அவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆவர். சுதந்திர மலேசியாவின் பிரதமர்கள் அனைவரும் வந்தேறிகள்தான். இன்றையப் பிரதமர் நஜிப் ரசாக் இந்தோனேசிய வந்தேறி. சுலவாசியிலிருந்து குடியேறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த இவர் இந்தப் பின்னணி குறித்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். நஜிப் ரசாக்கை பாராட்டுவதற்கு என்று ஏதேனும் இருந்தால், அது இது ஒன்றுதான்.

இந்நாட்டில் அசலான மலாய்க்காரர் யார்? கிர் தோயாவா, அப்துல்லா படாவியா என்று வினவிய மரினா மகாதிர், தாம் இல்லை [அசலான மலாய்க்காரர்] என்று அப்பட்டமாகக் கூறியுள்ளார். இதுதான் இங்குள்ள பெரும்பாலான மலாய்க்காரர்களின் நிலை.

இன்று பெரும்பான்மையினராக இருக்கும் அந்த இனத்தினர் இந்நாட்டின் மேம்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆற்றிய பணி என்ன?

தொழிலாளர்களாக, வணிகர்களாக இந்நாட்டிற்கு வந்த சீனர்கள் தங்களுடைய சீரிய உழைப்பால், சிக்கனத்தால், முதலீடு செய்து பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் காண விழைந்ததால், அவர்கள் இங்கு வளமானவர்களாக இருக்கிறார்கள்.

இந்நாட்டில் காலடி எடுத்து வைத்தவர்களில் நாட்டை கைப்பற்ற வேண்டும், அரசியல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இங்கு வாணிகத்துறையை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சி, சமயம், கலை, கலாட்சாரம் ஆகியவற்றோடு அன்றைய மக்களின் மொழி வளர்ச்சிக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களை வழங்கியவர்கள் கிபி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இந்தியர்கள்.

காலப்போக்கில், அன்றைய இந்தியர்களும் அவர்களுடைய தமிழ் மொழியும் ஆட்சிப்பீடம் ஏறின. மலாக்கா சுல்தான் ஆட்சிக்காலத்தில் தமிழ் அரண்மனை மற்றும் வாணிப மொழியாக விளங்கியது.

பின்னர், பிரிட்டீஷ் ஆட்சியில் இந்தியர்கள் திருட்டுத்தனமாக இங்கு வரவில்லை. பிரிட்டீஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்து அதே நிலையிலிருந்த மலாயாவுக்கு வந்தனர்.

ஆறுகளும் அதன் முகத்துவாரங்களும் தவிர மற்ற அனைத்தும் வெப்பமண்டலக் காடாக இருந்த இந்த நாட்டை தங்களுடைய வெறுங்கரங்களால் வெட்டினர், சாலைகள் அமைத்தனர், காட்டை நாடாக்கினர் அன்றைய இந்திய தொழிலாளர்கள். மில்லியன் ஏக்கர் கணக்கான காட்டை அழித்து மில்லியன் கணக்கில் மடிந்த இந்தியர்களின் உடல்களை ஒரே நேரத்தில் தீயிட்டிருந்தால் பல மாதங்களுக்கு இரவு பகலாக இருந்திருக்கும் என்று சித்தியவானை சேர்ந்த ஒரு மருத்துவர் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தார்.

“ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தொடக்கத்தில் இந்நாட்டிற்கு வந்த இந்தியர்கள், நாட்டை வளப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். மலேரியா போன்ற கடும் நோய்கள் மத்தியில் கடும் உழப்பை வழங்கிய அவர்களில் பலர் மடிந்திருக்கின்றனர்”, என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறியுள்ளார். ஆனால், விருந்து முடிந்ததும் விருந்தாளிகள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியவரும் இதே மகாதீர்தான்.

இந்நாட்டிற்காக அன்றைய இந்தியர்கள் உழைப்பையும் உயிரையும் மட்டும் தரவில்லை. பலரின் முதலீடுகளுக்கு பணமும் தந்துள்ளனர். செட்டியார்களிடம் கடன் வாங்காத இனமே இந்த நாட்டில் இருந்ததில்லை, அரண்மனையைச் சேர்ந்தவர்களும் உட்பட!

அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கம் (AMESU) 1970 களில் போர்ட்டிக்சன் கடற்கரை பகுதியிலுள்ள ஒரு மூன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கியது. அந்த நிலத்தின் பட்டாவில் தொடக்ககால உரிமையாளர்களான செட்டியார்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தன!

குறைந்தது 15 நூற்றாண்டு காலத்திற்கு இந்தியர்கள் இந்நாட்டின் வாழ்க்கை முறையையும் வளப்பத்தையும் மேம்படுத்த உதவியுள்ளனர். அவர்களோடு சீனர்களின் பங்களிப்பும் இல்லையேல் இன்றைய மலேசியா உருவாகியிருக்க முடியாது.

இன்னொன்றையும் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடியது அம்னோதான் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் மலேசிய தேசியத்தின் உண்மையான வாரிசுகள் அல்லர். அதனால்தான், அவர்களின் தலைவர் துங்கு அப்துல் ரஹ்மான் 1955 ஆம் ஆண்டு இந்தோனேசியா, பாண்டுங்கில் நடைபெற்ற ஆப்ரிக்க-ஆசிய இயக்கத்தின் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. [“…although Umno and Alliance leader Tunku Abdul Rahman went to the Bandung Conference of the Afro-Asian Movement in Indonesia in 1955, he was not admitted – not even to observer status – because the international non-aligned movement did not recognise him as the true inheritor of the mantle of Malayan nationalism.” – Dominic Puthucheary]

இறுதியில், “மெர்தேக்கா” என்ற சமஸ்கிருத சொல் முழங்க இந்நாடு சுதந்திரம் அடைந்தது.

1958 ஆம் ஆண்டில் மலாயாவின் மொத்த வருமானம் $182 மில்லியனாகும். இதில் 68 விழுக்காடு தோட்டத்துறையிலிருந்தும், 30 விழுக்காடு சுரங்கத்துறையிலிருந்தும், எஞ்சிய 2 விழுக்காடு இதரத்துறைகளிலிருந்தும் கிடைத்தது. தோட்டத்துறை இந்தியர்களின் அடையாளம். இது இந்தியர்களின் உழைப்பிற்கான சான்றாகும்.

இந்தியர்களின் பங்களிப்பு முக்கியம்

இந்தியர்களின் உழைப்புதான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருந்தது. இதனை இந்த நாடும், உலகமும் அறியும்.

அவ்வாறே உழைக்காமல் முன்னுக்கு வந்த அம்னோபுத்ராக்களின் அரசியல் வாழ்க்கைக்கும் இந்தியர்களின் வற்றாத ஆதரவுதான் அடித்தளம்.

இந்நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடுதான் என்றாலும், அவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் விழுந்து விழுந்து செவிமடுத்து வந்துள்ளதாம்.

இந்தியர்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை? அவர்களின் வாக்குச் சீட்டுகள்தான் அம்னோபுத்ராக்களை சுகவாசிகளாக வாழ வைக்கிறது.

மகாதீர் கூறுகிறார்: “நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதிகளில் கூட இந்தியர்கள் பெரும்பான்மையினராக கொண்ட ஒரு தொகுதி கூட நாட்டில் இல்லை. ஆனால், தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதில் அவர்களின் பங்கு அளப்பரியதாகும்.”

“எந்த கட்சியைச் சேர்ந்த எந்த வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்பதை சீனர்களும் இந்தியர்களும்தான் முடிவு செய்கின்றனர். எனவே இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது.” (தமிழ் நேசன் 11.5.2003)

இப்படித்தான் இந்நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் தவறாமல் தேர்தல் காலத்தில் கூறுகின்றனர். எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதையே தமது முக்கிய குறிக்கோளாகக் கோண்டு பிரதமர் நஜிப் செயல்பட்டு வருகிறார்.

அம்னோவினர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கு இந்தியர்களின் பங்களிப்பு முக்கியனானது என்று கருதும் அவர்கள் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளில் இந்தியர்களை எங்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேற்கூறப்பட்டுள்ள தகவல் கடந்த மஇகா ஆண்டு பேராளர்கள் மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 30, 2011 தமிழ் நேசனில் சிவ முருகன் பாண்டியன் எழுதிய இருந்த கட்டுரையில் சேர்க்கப்பட்டிருந்தது.

இது மிகக் குறுகிய ஒரு பட்டியல்தான். ஆனால், இப்பட்டியல் இந்தியர்கள் 1958 லிருந்து 2011 வரையில் வெற்றிகரமாக பின்னேற்றப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

இப்பட்டியல் வெளிவந்த பின்னர் ஏற்பட்டுள்ள ஒரே முன்னேற்றம் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்ததுதான். உண்மையில் அது முன்னேற்றம் இல்லை. முன்பு இரண்டாக இருந்த இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அவ்வளவுதான்.

இந்தியர்கள் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது; அதன் காரணமாக இந்திய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் போன்ற அனைத்தும் மஇகாவுக்கு தெரியாததல்ல. அவை குறித்து ஆய்வு செய்து அறிக்கைகள் தாயாரித்துள்ளது அக்கட்சி.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மஇகா தயாரித்திருந்த அறிக்கை இந்நாட்டு இந்தியர்களின் அவலத்தை விரிவாகப் பட்டியலிட்டதோடு அவர்கள் பரிதாப நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்டது.

“பொதுவாக மலேசிய இந்தியர்கள் மலேசியாவில் ஓரங்கட்டப்பட்ட பகுதியினராக கருதப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் வேலை, கல்வி அல்லது பொருளாதார வாய்ப்புகள் இல்லாதிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் நாட்டின் நல்வாழ்விலும் முழுமையாக பங்கேற்க இயலாமல் இருக்கின்றனர் (“Malaysian Indians are generally considered to be a marginalised lot in Malaysia. A majority of them are trapped in the vicious circle of poverty. The lack of employment, educational or other economic opportunities, and have therefore not been able to fully participate in the economic development and well being of the country.”) என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மஇகாவின் அந்த அறிக்கையில் இன்னும் ஏராளானமான விசயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் ஒரே வரியில் “நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகத்திற்கு இடமில்லை” என்று கட்சியின் புதிய தலைவர் ஜி. பழனிவேல் டிசம்பர் 23, 2010 இல் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினர். அதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்நிலையை சம்பந்தப்பட்ட அனைத்து ஆளுங்கட்சி தலைவர்களும் மூடிமறைத்து வந்துள்ளனர்.

இந்திய சமூகத்தை இந்தப் பரிதாபமான நிலைக்குத் தள்ளியது யார்? இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?

இந்நாட்டை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சமூகத்தினரின் வற்றாத ஆதரவுடன், அவர்களின் ஆணி வேறாக இருந்து ஆண்டு வரும் (அழித்து வரும்?) அம்னோ, மசீச மற்றும் மஇகா ஆகிய கட்சிகளின் கூட்டணி/பாரிசான் அரசாங்கம்தான் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இந்தியர்களின் ஏகப் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு பாரிசான் மட்டுமே இந்தியர்களை பாதுகாக்க முடியும் என்ற நிலைப்பாட்டை முழங்கும் மஇகா எந்த அடிப்படையில் அம்னோ மற்றும் மசீசவுடன் கூட்டாக இணைந்து நடத்தும் ஆட்சியில் இந்தியர்களை ஓரங்கட்டியது. இப்பயங்கர குற்றச்சாட்டை பகிரங்கமாக்கியது மஇகா தலைவர். குற்றம் புரிந்தவர்களில் ஓர் அங்கமான மஇகா தலைவர் குற்றம் சாட்டுவதோடு நின்று விடுவது நன்னெறிக்கு முரணானதாகும். அவர் அதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளாக இந்தியர்களை ஓரங்கட்டிய அரசாங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முனையாத மஇகா, கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்ட தோல்விக்குப் பின்னர் திடீரென்று பாரிசான் அமைச்சரவையிலிருந்து வெளியேறும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற செய்தி கசிய விடப்பட்டது.

“புதிய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களை மீட்டுக்கொள்வதற்கு ம.இ.கா ஆலோசித்து வருகிறது. டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய நிர்வாகம் இந்திய சமூகத்தை நடத்தும் முறை உட்பட தீர்க்கப்படாத பல விவகாரங்கள் தொடர்பாக ம.இ.கா ஏமாற்றம் அடைந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.” (தமிழ் நேசன் 12.4.2009)

இது ஒரு தீவிரமான சிந்தனை (நாடகம்?) தான். அதன் பின்னர், புதிய தலைவர் ஜி. பழனிவேல் 2010 இல் இந்திய சமூகம் ஓரங்கப்பட்டது என்ற தகவலை வெளியிட்டார். அது மஇகா அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு வலுவான காரணம் என்று கூறலாம். தமது சமூகத்தை ஓரங்கட்டி அவலப்படுத்திய அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய பொறுப்புடைய கட்சியும் அதன் தலைவரும் இன்னொரு அமைச்சர் பதவியை இந்திய சமூகத்தை முறையாக நடத்தாதவர் என்று யாரை குற்றம் சாட்டினார்களோ அதே புதிய பிரதமர் நஜிப்பிடமிருந்து பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்து விட்டனர்.

இப்போது, கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சமூகத்தை ஓரங்கட்டி கீழ்மட்ட மக்கள் நிலைக்குத் தள்ளிவிட்ட அம்னோ, மசீச மற்றும் மஇகா கூட்டணி/பாரிசாங்க அரசாங்கத்தை மீண்டும் எதிர்வரும் 13 ஆம் பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று விழாக்கள் நடத்திக்கொண்டிருக்கும் ஜி. பழனிவேல் “நாம் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகமே இல்லை” என்ற அவரின் குற்றச்சாட்டில் அடங்கியிருக்கும் அவலங்களை நிவர்த்தி செய்து விட்டாரா? அல்லது, தமக்கு வேண்டிய அமைச்சர் பதவி கிடைத்து விட்டது. தாம் ஓரங்கட்டப்படவில்லை. ஆகவே, “வாருங்கள் எனக்கு அமைச்சர் பதவி அளித்த, இந்திய சமூகத்தை ஓரங்கட்டிய பாரிசான் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்” என்கிறாரா?

நஜிப்பை நம்புவதா?

காட்டை நாடாக்கிய இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என்று 2010 ஆண்டில் ஆளும் பங்காளிக்கட்சியின் தலைவர் அவரது கட்சி இடம் பெற்றிருக்கும் அரசாங்கத்தைச் சாடினார். இந்தியர்கள் மீது எல்லையற்ற கருணை கொண்டுள்ள பிரதமர் நஜிப் அக்குற்றச்சாட்டை இதுவரையில் மறுக்கவில்லை. அப்படி என்றால், அக்குற்றச்சாட்டுகள் உண்மையானவை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தம்மீது “நம்பிக்கை” வைக்குமாறு தமது கட்சி அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களை கூட்டங்கூட்டங்க பொறுக்கிக்கொண்டு வந்து சோறும் கறியும் போட்டு கேட்டுக்கொண்டார். போதுமா?

மார்ச் 6, 2008, கோலாலம்பூர் மஇகா கூட்டத்தில் தேசியப்பள்ளிகளுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும்இடையில் வேறுபாடு இருக்காது என்று வாக்குறுதி அளித்தார். ஏன் தேசியப்பள்ளிக்கு ரிம33.30, தமிழ்ப்பள்ளிக்கு ரிம10.95 மற்றும் சீனப்பள்ளிக்கு ரிம4.50 என்ற அளவிலான பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டு முறையில் இதுவரையில் மாற்றம் செய்யப்படவில்லை?

பத்தாவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்தில் இம்முறையை மாற்றியுள்ளாரா?

தமிழ் மற்றும் சீன தொடக்கப்பள்ளிகளை மூட வேண்டும் என்பது அம்னோவின் இறுதிக் குறிக்கோள். நஜிப்பின் தந்தை அப்துல் ரசாக் உருவாக்கிய கொள்கை. அக்கொள்கை “வழக்கற்று போய்விட்டது” என்று மார்ச் 7, 2007 இல் கதை கட்டினார் முன்னாள் கல்வி அமைச்சர் ஹிசாம் முடின். ஆனால், “ஒரே மொழி”, “ஒரே மலேசியா” என்று அந்த அம்னோ இறுதிக் குறிக்கோளை 29.10.2009 இல் இன்றய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கோத்தா திங்கியில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அம்னோவின் இந்த தாய்மொழிப்பள்ளி அழிப்பு கொள்கையை நஜிப் நிராகரித்தாரா? அவரது கல்வி அமைச்சரை கண்டித்தாரா? மகாதீர் முகமட் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்றார். அவரது மகன் முக்ரீஸ்சும் அவ்வாறு கூறியிருந்தார். அவர்களை நஜிப் கண்டித்தாரா? இல்லை.

மாறாக, சப்பை கட்டு வேலையைச் செய்துள்ளார். 1.11.2009 இல் “ஒரே கல்வி முறை மக்கள் அங்கீகாரத்துடனேயே அமல்படுத்தப்படும்”, என்று “நம்பிக்கை” நாயகன் நஜிப் பதில் அளித்தார். அதன் அர்த்தம்: அம்னோவின் இறுதிக் குறிக்கோள் கொள்கை தொடர்கிறது. சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் தயவும் ஆதரவும் இன்றி தேர்தலில் அம்னோ வெற்றி பெறும் நாள் வரும்போது அந்த மக்கள் அங்கீகாரத்துடன் அமல்படுத்தப்படும்.

செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டடத்திற்கு ரிம1 மில்லியன் நிதி அளிப்பதாக 24.4.2010 இல் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக நம்பிக்கை தலைவர் நஜிப் அறிவித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி அப்பள்ளி வாரியக்குழு உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.

தமிழ் மற்றும் சீனப்பள்ளி மாணவர்கள் இந்நாட்டு குடிமக்கள். அவர்களுடைய பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு தேவையான நிலத்தை அம்மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி வாரியங்கள் தேடிப் பெற வேண்டும். ஆனால், தேசியப்பள்ளிக்கு தேவைப்படும் நிலத்தை அரசாங்கம் வழங்கும். ஏன் இந்த வேறுபாடு? தமிழ்ப்பள்ளிக்கு அள்ளிக் கொடுக்காவிட்டாலும், கிள்ளிக் கொடுங்கள் என்று ஏன் ஜி. பழனிவேல் கெஞ்ச வேண்டும்? தமிழ்ப்பள்ளிகளை தத்தெடுங்கள் என்று உலக நாடுகளிலேயே 29 ஆண்டுகள் வரையில் அமைச்சராக இருந்து வரலாறு படைத்த ச.சாமிவேலு கெஞ்ச வேண்டும்? அம்னோ அமைச்சர்கள் எவராவது இவ்வாறு பிச்சை எடுக்கிறார்களா? இந்த வேறுபாட்டை நஜிப் ஏன் இன்னும் களையவில்லை?

தமிழ் மற்றும் சீனப்பள்ளி மாணவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் இந்த நாட்டிற்கு ஆபத்து வரும் என்றால் போர்க்களம் சென்று உயிர்த் தியாகம் செய்ய வேண்டும். அது கடமை. அதிலிருந்து விதிவிலக்கு இல்லை. இருக்கக் கூடாது. ஆனால், அம்மாணவர்கள் பள்ளி மாணவர்களாக இருக்கையில் ஏன் வேறுபாடு?

தமிழ், சீனப்பள்ளிகளுக்கு சமாதி கட்டுவதற்கான கல்விப் பெருந்திட்டம்!

செப்டெம்பர் 11, 2012 இல் “நம்பிக்கை” நஜிப் வெளியிட்ட மலேசிய கல்வி அமைச்சின் மலேசியா கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இரு நூறுக்கு மேற்பட்ட பக்கங்களையும் 2 மில்லியன்களுக்கு கூடுதலான சொற்களையும் கொண்ட அறிக்கையில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் பற்றி முழுமையாக ஒரு முழுப்பக்கம் கூட இல்லை.   2000-2010 ஆண்டுகளில் இருந்த தமிழ் மற்றும் சீன தொடக்கப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் முறையே 47 விழுக்காட்டிலிருந்து 56 விழுக்காடாகவும் (9% விழுக்காடு உயர்வு),  92 விழுக்காட்டிலிருந்து 96 விழுக்காடாகவும் (4% உயர்வு) அதிகரித்தது தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதில் கடுமையானது தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 9 விழுக்காடு உயர்ந்திருப்பது! (“The shift for Indian students is even more dramatic, showing an increase from 47 % to 56% enrolment in SJK(T).”)

தாய்மொழிப்பள்ளிகள் மீது காட்டப்படும் ஈடுபாடு தேசிய ஒற்றுமைக்கு மிரட்டல். ஆனால், பிரதமர் நஜிப் தலைமையிலான பிரதமர் இலாகாவின் குடியியல் பயிற்சி பிரிவு (Biro Tata Negara) மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கப் பணியாளர்களுக்கு நடத்தும் இனவாதப் பயிற்சிகள் தேசிய ஒற்றுமைக்கு மிரட்டலாக அமையவில்லை!

இக்கல்விப் பெருந்திட்ட வரைவுக்கு முன்னதாக மக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று அறிக்கை கூறுகிறது. தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் அம்மொழிகளைப் பயன்படுத்தும் மக்களின் உரிமை. ஆகவே, தேசிய கல்வி அமைவுமுறையின் அங்கங்களான அவை நிலைநிறுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறவில்லை.  இதன் அர்த்தம்: அம்னோவின் இறுதிக் குறிக்கோள் கொள்கைக்கு ஏற்ப இப்பள்ளிகளுக்கு சமாதி கட்டப்படும்.  இப்படிப்பட்ட ஒரு கல்விப் பெருந்திட்டத்தை வெளியிட்ட நஜிப்பை எப்படி நம்புவது?

7 விழுக்காடா அல்லது 100 விழுக்காடா?

இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திண்டாடுகிறார்கள். வேலை இருந்தாலும் எதோ பேச்சுக்காக 7 விழுக்காடு. அதே இளைஞர்கள் நாட்டிற்காக போராட ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வரும்போது 7 விழுக்காடு இந்திய இளைஞர்கள் மட்டும்தான் அழைக்கப்படுவார்களா? இல்லை. 100 விழுக்காடு. அது கடமை. ஆக, உரிமை 7 விழுக்காடு. கடமை 100 விழுக்காடு! இதற்காக நஜிப்பை நம்ப வேண்டுமா?

தீபாவளி சந்தைகள் இடம் மாறுகின்றன. ஏன்?

ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தினரிடம் இன்னும் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு நஜிப் பதில் அளிப்பார் என்ற “நம்பிக்கை” ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களிடம் இல்லை.

TAGS: