சென்னை : விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்-ல் வெளியிட்டால், அகன்ற திரையில் அனைவருக்கும் இலவசமாக படத்தை காட்டுவோம் என கமலுக்கு தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ம் தேதி இப்படம் உலகம் முழுக்கவெளியீடு காண்கிறது.
தியேட்டரில் படத்தை வெளியிடுவதற்கு 8 மணிநேரத்திற்கு முன்பாக விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,ல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்துள்ளார். கமலின் இந்த புதிய திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்களோடு சேர்ந்து கேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“மூவி அன்டு டிமாண்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் வியாபாரத்தை பெருக்க கமல் நினைக்கும் முயற்சியில் நியாயம் இருக்கிறது. அது கேபிள் டி.வி. மூலம் செய்வது மட்டுமே சாத்தியம். அவரது பிரம்மாண்டமான அடுத்த படைப்பு இந்த முயற்சியை கேபிள் டி.வி. மூலம் சாதிக்கும். அவற்றை விடுத்து டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை ஒளிப்பரப்பியே தீருவேன் என்று கமல்ஹாசன் முடிவெடுத்தால் நூற்றாண்டுகால சினிமா வளர்ச்சியை கவுரவப்படுத்திட டி.டி. எச்.சில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது, பட்டிதொட்டி எங்கும் வீடியோ ஸ்கோப் என்னும் அகன்ற திரையை பொருத்தி ஊர்மக்கள் ஒன்று கூடிட இந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிப்பரப்புவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் டி.டி.எச். மூலம் ஒளிப்பரப்பாகும் திரைப்படத்தை டவுன்லோடு செய்யமுடியாது என்று கூறியுள்ளார். அது தவறான தகவல். கமல் வேண்டுகோள் விடுத்தால் அந்த திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியும் என்பதை அவர் முன்னிலையிலேயே நிரூபித்துக் காட்ட தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.