உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக லியோனெல் மெஸ்ஸி

lionel_messiஉலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d’Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் ஸ்பெயினின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை முந்திக்கொண்டு இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் நடந்த வைபவத்தில் மெஸ்ஸியே விருதுக்குரியவர் என்பது அறிவிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில் மட்டுமே 91 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, பல்லோன் தோர் விருதை தொடர்ந்து நான்கு முறை வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த விருதை தொடர்ந்து மூன்று முறை வென்றிருந்த பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரரும், ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பான உயெஃபாவின் இந்நாள் தலைவருமான மிஷெல் பிளடினியின் சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார் என்று சொல்லலாம்.