கருணாநிதியை சும்மா விட மாட்டேன்; ஜெயலலிதா ஆவேசம்

jaya_tn_aiadmk_ptiசென்னை: விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக நான் கமலுக்கு எதிராக நடந்து கொண்டதாகவும், எம்.ஜி.ஆரிடம் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது. அவர் மீது உரிய வகையில் அவதூறு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியின்போது கூறுகையில், நடிகர் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட துவேஷம், முன்பகை காரணமாக நான் இப்படி நடந்து கொண்டதாக ஒரு புகாரைக் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. வேட்டி கட்டி தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதற்காக அவர் மீது நான் நடவடிக்கை எடுத்ததாக கருணநிதி கூறியுள்ளார்.

வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினால் நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசனுக்குப் பேச்சு சுதந்திரம் உள்ளது. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை நான் எப்படித் தடுக்க முடியும்.

நான் பலவருடமாக அரசியலில் இருக்கிறேன். அரசியல் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது. கமல்ஹாசன் பிரதமரைத் தேர்வு செய்வதில்லை என்பதை நான் நன்றாக அறிவேன். 100 கோடி மக்கள் உள்ளனர். அவர்கள் வாக்களித்து ஒரு கட்சியை அல்லது கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வருகிறார்கள். பின்னர்தான் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். எனவே கமல் பேசியதால் நான் ஏன் கோபமடைய வேண்டும்.

ஆனால் கருணாநிதி கண்மூடித்தனமாக இப்படி புகார் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, 1980களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்குப் புகார் கூறி கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் கேலிக்குரிய புகாராகும். பெரும் கோமாளித்தனமான புகாராகும். நான் எம்.ஜி.ஆரை தினசரி சந்திக்கும் வழக்கம் கொண்டவர்.

அப்போது நான் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தேன், எம்.பியாக இருந்தேன். தினசரி கட்சிப் பணி தொடர்பாக எம்.ஜி.ஆரை சந்திப்பேன். பிற்பகலில் மாம்பலம் அலுவலகத்தில் சந்திப்போம், மணிக்கணக்கில் பேசுவோம், சேர்ந்து சாப்பிடுவோம். அரசியல், கட்சிப் பிரச்னைகள் குறித்துப் பேசுவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் அவருக்குக் கடிதம் எழுத வேண்டும். அதுவும் மிகச்சாதாரண விஷயத்திற்காக. கருணாநிதி கூறியிருப்பது அப்பட்டமான புகார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் மீது சட்டப்படியான, அவதூறு வழக்குகள் தொடரப்படும்.

உண்மையில் நான் எதிரியாக கருத வேண்டிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி மட்டுமே. கமல்ஹாசன் அல்ல. அவர் எனக்கு எதிரியும் அல்ல, போட்டியாளரும் அல்ல.

கருணாநிதி குடும்பத்தினர் பல படங்களை எடுக்கின்றனர், வெளியிடுகின்றனர். நான் அதைத் தடுக்கவில்லையே. அப்படி இருக்கும்போது எனது எதிரி இல்லாத கமல்ஹாசன் மீது நான் ஏன் பகைமை காட்டப்போகிறேன் என்றார் ஜெயலலிதா.

TAGS: