தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு

tamil nadu fishermenகாரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(23), கருப்பையா(48), கண்ணப்பன்(63), பொன்னுசாமி(49), வைரக்கண்ணு(43) ஆகிய 6 பேர் கடந்த 5-ஆம் திகதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

வெள்ளிக்கிழமை காலை அவர்கள் நாகை மாவட்டம், கோடியக்கரைக்குக் கிழக்கே 6-ஆம் பாகம் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் படகில் அத்துமீறி புகுந்து ஐஸ் உடைக்கும் கட்டையை எடுத்து மீனவர்கள் 6 பேரையும் கடுமையாக தாக்கினர். இதில் ராஜாவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் கடலில் குதித்து விட்டனர்.

படகில் ஓட்டுநர் பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, படகை பல்வேறு இடங்களில் இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தினர். படகில் மீனவர்கள் வைத்திருந்த மீன்கள் மற்றும் பல்வேறு பொருள்களை எடுத்துக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

இலங்கைக் கடற்படையினர் புறப்பட்ட பின்னர், கடலில் குதித்த மீனவர்கள் மீண்டும் படகில் ஏறினர். சனிக்கிழமை அதிகாலை அவர்கள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வந்து சேர்ந்தனர். பலத்த காயமடைந்த மீனவர் ராஜா, காரைக்கால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், சனிக்கிழமை பிற்பகலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

TAGS: