ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச்.25,2013) முதல் இந்த கல்லூரிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் பின்னணியில், தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று போராடும் மாணவர்களுக்கான அமைப்பாக உருவாகியிருக்கும் அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் விளக்கினார்.
போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று கூறிய செம்பியன், இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்யப்போவதாக கூறினார்.
அதேபோல், ஐநா மன்றத்தீர்மானத்தில் இலங்கைக்கான சர்வதேச விசாரணை தேவை என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை உள்வாங்காத அமெரிக்க அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டு போராட முயற்சிப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதேபோல் எழும்பூர் கென்னட் சந்தில் உள்ள மகாபோதி புத்த மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அடிக்கடி நடைபெறும் போராட்டங்களின் காரணமாக சென்னையில் உள்ள தங்கள் துணை தூதரகத்தை கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது பற்றி இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக கொழும்பு நகரில் இருந்து வெளியாகும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.