பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; ஜெயலலிதா

jayalalitha_tamilnaduதமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து தமிழர்களுக்கு அந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுவரும் வேளையில் இத்தருணத்தைப் பயன்படுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைக்கு இலங்கையை ஒப்புக் கொள்ளவைக்க வேண்டும், மாநாட்டினை இலங்கையிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றவும் இந்தியா முயலலாம் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

”எப்படியும் தமிழ்நாட்டு மக்கள் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து ஏமாற்றமடைந்திருக்கும் நிலையில் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும், ஏற்கனவே கனடா அவ்வாறு செய்யப்போவதாக செய்திகள் வந்திருக்கின்றன” என்று தனது கடிதம் ஒன்றில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதே போன்று இன்று கூடிய திமுக செயற்குழுவும் காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக்கவேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் இயற்றியிருக்கிறது.

TAGS: