முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!

electionஅயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு ‘தமிழன்டா’ என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும்  தமிழர்களிடம்  இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது.

அண்மைய காலமாகக் கண்களில் தட்டுப்படும் தமிழ் மக்களிடமெல்லாம் தேர்தல் குறித்தே பேச்சைத் தொடங்குகிறேன். வேறெதையும்விட இதுவே அவர்களின் மன அமைப்பை அறிந்துகொள்ள ஒரே வழியாக இருக்கிறது. அவ்வாறு பேசும் பொழுதெல்லாம் பெரும்பாலும் அரசாங்க ஊழியர்களிடம் சில கேள்விகள் எழுகின்றன. அவற்றை பின் வருமாறு தொகுக்கலாம்.

அ. ஓட்டு சீட்டில் எண்கள் இருப்பதால் நமது அடையாளம் வெளிப்பட்டுவிடும். எனவே எப்படி தைரியமாக எதிர்க்கட்சிக்கு ஓட்டுப்போடுவது.

ஆ. அரசாங்க ஊழியரான நான் அரசாங்கத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டாமா?

இ. புதிய அரசு நமக்கு இருக்கிற உரிமைகளையும் பறித்தால் என்னாவது? மாற்றத்தை எதிர்க்கொள்வது சாத்தியமா?

இந்தக் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரியும்படிதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

அ. ஓட்டுச்சீட்டு இரகசியமாக இருக்க வேண்டியது உண்மைதான். ஆனால் பாரிசானிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தேர்தல் ஆணையம் எப்படி வேண்டுமானாலும் வளைந்துகொடுக்கவே செய்யும். எனது கேள்வி என்னவென்றால் நமது ஓட்டை யார் கண்காணித்தால் என்ன? மாற்றம் நமக்கு வேண்டுமென முடிவெடுத்தப்பின் பகிரங்கமாகவே நான் ஓட்டுப்போடத் தயாராக உள்ளேன். காரணம் எனக்கு விருப்பமான ஒரு கட்சியைத் தேர்வு செய்வது எனது உரிமை.

malaysian_indiansஇந்நாட்டின் குடிமகனாக எனக்கிருக்கும் உரிமையை நான் யாருக்காக பயந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.  ஒருவேளை ஏதும் பாதிப்பு என்றே வைத்துக்கொள்வோம். இலங்கையில் இயல்பான வாழ்வுக்காகவே  போராடும்  தமிழர் நிலையோடு ஒப்பிட்டால் அப்படி ஒன்றும் நமது நிலை மோசமாகிவிடாது என்றே நினைக்கிறேன். இருக்கின்ற சொகுசை  கொஞ்சம் கூட இழக்கக்கூட தயாராக இல்லாத நிலையில் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை. நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. யாரையும் வற்புறுத்த வேண்டியதில்லை. மாற்றம் தேவையென நினைத்தால் யாருக்கும் அஞ்சாமல் உங்கள் ஓட்டை சுதந்திரமாக பதிவு செய்வதே போராட்டத்தின் ஒரு வடிவம்தான்.

ஆ. முதலில் நாம் அதிகார பீடங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டியதில்லை. நன்றிக்கடன் என்பது முதலாளிகள் உருவாக்கிய கெட்டவார்த்தை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அரசு ஊழியர் மக்களுக்காக உழைப்பவர். உங்களால் உண்மையில் மக்களுக்காக உழைக்க முடிகின்றதா என யோசியுங்கள். அதற்காக உழையுங்கள். அதை எந்த அரசு மாறினாலும் செய்யலாம். நமது கவனமும் பார்வையும் வெகுமக்களை நோக்கி இருக்க வேண்டும். ஒருவேளை அது அதிகார பீடத்தை மட்டுமே பார்க்குமானால் அது சேவையல்ல. அடிமை புத்தி. அதிலிருந்து வெளிவாருங்கள்.

இ. ஒருபேச்சுக்கு பறிக்கப்படுவதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் இப்போது என்ன? 55 வருடமாக படாத துன்பத்தையா ஐந்து வருடங்களில் அனுபவித்துவிடப்போகிறீர்கள். ஆனால் இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மனம் மேலும் பக்குவமடையும். அரசாங்கம் என்பதையும் உண்மையான ஜனநாயகத்தின் சக்தியையும் ஆழமாக உணர முடியும். அது வளரும் சந்ததியனருக்கும் படரும்.

மத்திய கிழக்கில் உயிரைப் பணயம் வைத்து இளையர்கள் மீட்டெடுத்துள்ள  புதிய சுதந்திரம் போல் இந்தத் தேர்தல் அத்தனை உக்கிரமாக இருக்கப்போவதில்லை. ஆனால், இது தோல்வி அடைந்தால்  மலேசியாவில் நாம் காணும் இறுதி மக்கள் போராட்டமாக இது அமையக்கூடும். அதன் பின்னர் நமது வருங்கால சந்ததியனர் கேள்விகளற்ற ஒரு அடிமை புத்திகொண்ட இயந்திரங்களாக மட்டுமே நாட்டில் சுற்றுவார்கள்.

மாற்றம் என்பது போராட்டங்கள் வழியும் வலிகளின் வழியுமே சாத்தியம். அது கூடாது என நினைத்தால்… இருக்கவே இருக்கிறது உங்கள் வீட்டு தொலைக்காட்சியில் சீரியல்கள். நாள் முழுவதும் பார்க்கலாம். சுரணையற்றவர்களால் அதுமட்டுமே செய்யமுடிகிறது… எல்லா நாடுகளிலும்.

-ம.நவீன்