13-வது பொதுத் தேர்தல் : செத்துப்போன ஜனநாயகத்தின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!

demokarasi new pic 01உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு  தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது.

தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான சமாட் சைட் சொன்னது போல எந்தக் கட்சிக்குப் போட்டாலும் அம்னோ அரசாங்கத்தை முழு முற்றாய் புறக்கணிக்கும் தீவிரத்துடன்தான் இளைஞர்கள் இந்தத் தேர்தலில் இயங்கினார்கள்.

இளைஞர்களின் தேர்தல்

ini kalilahஆமாம்! இது இளைஞர்களின் அலை பாதித்த தேர்தல்தான். பயணிக்கும் இடங்கள் தோறும் இன, மத பாகுபாடு இல்லாமல் இளைஞர்களின் ‘ini kalilah’ எனும் கோஷம் உற்சாக மூட்டிக்கொண்டிருந்தன. ஃபேஸ் புக்கில் முகம் புதைப்பவர்கள், கேளிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள், பேரங்காடிகளில் நேரத்தைப் போக்குபவர்கள் என்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் பொசுக்கிவிட்டு ‘மாற்றம் … மாற்றம்’ என கூவித் திரிந்தனர் இளைஞர்கள். அவர்கள்  மாற்றுப் பார்வையை இனமோ மதமோ திடீரென கிடைக்கும் சிறப்பு சலுகைகளோ ஐநூறு வெள்ளியோ மறைக்கவில்லை. கடந்த காலங்களின் கசப்புகளும் பாரிசானின் இனவாதப் போக்கு மட்டுமே இந்த இளைஞர்களை மாற்று அரசியலை நோக்கி உந்தித்தள்ளியது.

இந்திய இளைஞர்கள்

இதே காலக்கட்டத்தில் மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டி.மோகன்  தொடங்கி காலாவதியாகிவிட்ட சாமிவேலு வரை இந்திய இளைஞர்களை தன் கைப்பாவையாகப் பயன்படுத்திக்கொண்டு தத்தம் கோஷங்களை எழுப்பப் பயன்படுத்திக்கொண்டனர். காலம் தோறும் கல்வி அறிவில்லாத இந்திய இளைஞர்கள்தான் ம.இ.காவினரின் பலம். அவர்களை தத்தம் வளர்ப்பு பிராணிபோல உபயோகிக்க அவர்கள் சிந்தனையை முதலில் மழுங்க செய்கின்றனர். உறுதியற்ற ஒரு வாழ்க்கை முறையில் அவர்களை நிலைக்கச் செய்கின்றனர். சிந்திப்பதற்கான பொதுவெளியை அவர்களுக்கு ஏற்படுத்துவதே இல்லை. உருட்டல் மிரட்டலால் எதையும் சாதிக்கலாம் என நம்பிய சாமிவேலு, அடுத்த தலைமுறையினருக்கு தவறான உதாரணமாகினார்.

விளைவு, நாடுமுழுதும் மறுமலர்ச்சிக்காக எழுந்த விழிப்புணர்வு இந்திய இளைஞர்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரையே பாதித்திருந்தது. மீதி இளைஞர்கள் ஓசியில் கிடைத்த பாரிசான் டி.சட்டையைப் போட்டுக்கொண்டு எதற்காக ஒன்றை ஆதரிக்கிறோம் எனத்தெரியாமல் காட்டிய திசையில் ஓடினார்கள்… கூட்டிய குரலுக்குக் கூடினார்கள். அவர்கள் உணர்ச்சிவயப்பட காரணமாக இருப்பது எப்போதும் சமயமும் மதமும்தான். அந்த எழுச்சியில் கூடிய ஹிண்ட்ராப் பின்னர் அணைந்தது. அதில் பூத்திருந்த அக்கினியை அவனவன் புகைப்பிடிக்க நெருப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேதமூர்த்தி அவ்வக்கினியைச் சமுதாயத்திற்குக் கொள்ளிவைக்கப் பயன்படுத்திக்கொண்டார்.

வேதமூர்த்தி எனும் வியாபாரியும் பெ. உதயகுமாரும்

hindraf brothersவேதமூர்த்தியின் சோரம்போன முகம் உதயகுமாரின் வெற்றிக்கு ஒரு தடையாக இருந்த உண்மையை நான் நேரில் சென்று அவரைச் சந்தித்தபோது அறிய நேர்ந்தது. ‘தம்பி தேர்தலுக்கு முன் பாரிசானில் சேர்ந்தான்; அண்ணன் தேர்தலுக்குப் பின் சேருவான்’ என பகிரங்கமாகவே மக்கள் பலிக்கத் தொடங்கியிருந்ததை உதயகுமார் ஒப்புக்கொண்டார். தான் எப்போதும் பாரிசானை நாடப்போவதில்லை என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். உண்மையில் ஹிண்ட்ராப்புக்காகப் போராடி சிறைச்சென்று மீண்டப்பின்பும் தனது நிலைப்பாட்டில் மிக உறுதியான பிடிவாதத்தோடு இருந்ததே அவரின் பலமாகவும் பலவீனமாகவும் மாறியது. அவர் தோல்வியைத் தழுவினாலும் இனி அவர் எடுக்கப்போகும் சாதுர்யமான முடிவுகளால் இனவாத பாரிசானை முடக்கும் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்தால் மகிழ்ச்சி.

ஆனால், வேதமூர்த்தி எனும் ஒட்டுண்ணியை சமுதாயம் என்றுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர் இச்சமுதாயத்துக்கு இன்னுமொரு மண்டோராக வேண்டுமானால் தன்னைக் கற்பனைச் செய்துக்கொள்ளலாம். பிரித்தாளுவதில் திறன் கொண்ட பாரிசான், இனி இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்க்க வேதமூர்த்தியை தனி ஒரு அமைப்பாக அமர்த்தி படம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஒரு ஒட்டுண்ணி போல சமுதாயத்தின் இரத்தத்தை உறிஞ்சி கொண்டு அடுத்தத் தேர்தலுக்குக் கணக்கு வழக்குகளைக் காட்டலாம். அல்லது ஏற்கனவே சோரம் போன தனேந்திரன், பாடாங்செராய் கோபாலகிருஷ்ணன் போன்றும் அறிக்கைகள் விடலாம்.

இது நேர்மையான தேர்தலா?

எனது கடந்த கட்டுரை ஒன்றில்  இந்தத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டுவரப்போவது விவேகக் கைத்தொலைபேசிதான் எனக் கூறியிருந்தேன். மக்கள் கூட்டணிக்கு பொது ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவமும் வழங்காத நிலையில் இணையம் இல்லாத கிராமப் புறங்களில் அது உண்மையின் குரலாக இருக்கும் என்பது என் எதிர்ப்பார்ப்பு. ஆனால் விவேகக் கைப்பேசி இத்தேர்தலில் வேறு வகையில் பயன்பட்டது. தேர்தல் கணக்கெடுப்பின்போது தொடர்ச்சியாக இணையத்தில் இணைந்திருந்தேன்.  2 நிமிடத்துக்கு ஒன்றென தேர்தலில் நடந்த ஊழல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகிக்கொண்டே இருந்தது. உதாரணமாகச் சில:

13* வங்காளதேசி, பாகிஸ்தான், நேபாள், இந்தோனிசியா போன்ற அந்நிய நாட்டவர்கள் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. அவர்களைத் தடுத்த மலேசியர்கள் போலிஸ்காரர்களால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் பலத்தப் பாதுகாப்புடன் அந்நிய நாட்டவர்கள் ஓட்டுச்சாவடிக்குள் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

* ஒரு காரில் பாரிசான் ஆதரவளார்கள் அமர்ந்துகொண்டு ஓட்டுப்போட வந்தவர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் பாரிசானுக்கு ஓட்டுப் போடுவதாக உறுதி தருகின்றனர்.

*  கள்ள வாக்கு போடுவதற்காக அந்நிய தொழிலாளிகளுக்கு 4 மணி நேரத்தில் குடியுரிமையுடன் வழங்கப்பட்ட  நீல நிற அடையாள அட்டையைப் பெறத்தான் இந்நாட்டுக்காகப் பல காலமாக உழைத்த இந்தியர்கள் போராடிவருகிறார்கள் என   பாரிசானை ஆதரிக்கும் எந்த போலி போராட்டவாதியும் வாய்த்திறந்து சொல்லவில்லை.

321377_565371356816509_852576680_n* இந்நிலையில், பல இடங்களில் வாக்கு சீட்டு கணக்கெடுப்பு நேரத்தில் மின் சக்தி துண்டிக்கபட்டதும் உடனுக்குடன் முகநூலில் பதிவானது.

*  வாக்கு சீட்டு பெட்டி சட்டத்திற்குப் புறம்பாக இரவு 10 மணிக்கு மேல் கொண்டுவரப்பட்டது ஊழலில் உச்சம் எனலாம். மக்கள் அதை தடுத்தும் பகிரங்கமாகவே அப்பெட்டி ஓட்டு எண்ணிக்கையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

* ஒரு தேர்தல் வாரிய அதிகாரி ஓட்டுச்சீட்டை அறையைவிட்டு வெளியே எடுத்துவந்தபோது அகப்பட்டார். மக்களின் முன் மாட்டிக்கொண்ட அவர் தான் கொண்டுவந்த ஓட்டுச்சீட்டை வேறுவழியில்லாமல் பிரித்துக்காட்டி தலைக்குனிந்து நின்றார்.

* எல்லாவற்றுக்கும் மேலாக அழியா மை எனக்கூறி பல லட்சம் செலவு செய்து வாங்கப்பட்ட மை எளிதாக அழிந்தது. அழியும் மைக்கு எதற்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டும் எனக் கேட்கப்பட்டதற்கு தேர்தல் வாரியத்திடம் எந்த பதிலும் இல்லை. அழியும் மை குறித்து செய்யப்பட்ட புகாருக்கும் நடவடிக்கை இல்லை.

என்ன வேண்டுமானாலும் நடக்கும்

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, தொலைக்காட்சியையும் இணையத்தையும் தொடர்ந்தார்போல பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இந்நாட்டில் என்ன வேண்டுமாலும் நடக்கும் என புரியவைத்தது தடாலடியாக மாறிய ஓட்டு எண்ணிக்கை.

09Malaysiakini மற்றும் freemalaysiatoday மூலமாக காட்டப்பட்டு வந்த கணக்கெடுப்புகள் சட்டென ஸ்தம்பித்து நின்றன. தொலைக்காட்சிகளில் சரவாக்கில் எண்ணப்பட்ட கணக்கெடுப்பை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதன் மூலம் பாரிசான் முன்னிலையில் உள்ளது என முழங்கிக்கொண்டிருந்தார்கள். புதிய விபரங்கள் பதிவாகாத நிலையில் மீண்டும் ஓட்டு எண்ணிக்கைக் காட்டப்பட்ட போது பாரிசான் அதிக முன்னணியில் இருந்தது. ஏதோ ஒரு மாயவித்தை நடந்தது போல சமூக ஊடகங்களில் அதிர்ச்சி அலை.

எதைப்பற்றியும் கவலைப் படாமல் தேர்தல் வாரியம் பாரிசான் அதிக ஓட்டுகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததாக அறிவிக்க நஜீப் வெட்கம் இல்லாமல் வெற்றியைக் கொண்டாடினார்.

என்ன செய்வது?

குறைந்த பட்சம் அந்த நிமிடமாவது மக்கள் எவ்வளவு ஆபத்தான நாட்டில் வாழ்கிறார்கள் என அறியாமல் இருந்தால் இனி மறுமலர்ச்சி சாத்தியம் இல்லைதான். மக்களுக்காக இயங்க வேண்டிய ஊடகங்கள், காவல்துறை என அனைத்துமே ஒட்டுமொத்தமாக வசியத்திற்குக் கட்டுப்பட்டதுபோல அதிகாரத்தின் பின்னால் நிர்க்க மக்கள் நிர்க்கதியாய் நின்றனர். அவர்களுக்கு முறையிடவோ நீதி கேட்கவோ இடமே இல்லாத சூழலில் வெடிப்பதற்காகக் காத்திருந்தனர். இந்நிலை பாரிசானுக்கு நேர்ந்திருந்தால் கலவரம் நடந்திருக்கலாம். ஆனால் அன்வார் இப்ராஹிம் மக்களைத் தூண்டவில்லை. அவர் அமைதி மறுநாள் பொழுது இந்நாட்டில் அனைவரும் வழக்கம்போல நடமாட வழி செய்தது.

நஜீப்பும் அதன் கைப்பாவைகளும்

anwar5இனவாத அரசியலை நம்பியிருக்கும் பாரிசானுக்கு அமைதி என்பது பிடிக்குமா என்ன? தேர்தல் பிரச்சாரத்திலேயே ‘எதிர்க்கட்சி வென்றால் இந்நாடு சீனர்கள் வசமாகிவிடும்’ என்ற தங்கள் பிரபலமான வாசகத்தைப் பயன்படுத்தித் திரிந்தவர்கள் தேர்தலில் எல்லா ஊழல்களையும் செய்தப்பின் எதிர்ப்பார்த்த இடத்தைப் பிடிக்க முடியாத எரிச்சலில் மீண்டும் தங்கள் இன துவேசத்தைக் கொப்பளித்தனர்.

நல்லப் பிள்ளை வேசம் போட்டுக்கொண்டிருந்த நஜீப்பின் உண்மை முகம் அந்த அதிகாலைதான் அம்பலமானது.’ tsunami Cina’ என்ற அடைமொழியுடன்  சீனர்கள் ஓட்டினால்தான் எதிர்க்கட்சி பலப்பட்டது என்றார். அதற்கு ஒத்தூதும் வகையில் அம்னோவின் பத்திரிக்கையான ‘உத்தூசான்’ இன்னும் என்ன வேண்டும் சீனர்களுக்கு என்ற தலைப்புச் செய்தியுடன் பத்திரிகையை வெளியிட்டது. அதில் இனவாதத்தைத் தூண்டும் விதமாக ‘சீனர்கள் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் பாரிசானை கவிழ்க்க நினைத்தார்கள் என்றும் அன்வாரைப் பிரதமராக மாற்றி தங்கள் அரசியல் பலத்தை வலுப்படுத்தும் அவர்கள் திட்டம் பயனளிக்கவில்லை அதனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள் ‘  எனக் கருத்துரைத்திருந்தது. அதேபோல ‘கோஸ்மோ’விலும் சீனர்கள் இரட்டை வேடதாரிகள் எனச் சாடியிருந்தது.

ஆக மொத்ததில் நஜீப்பும் அவர் அல்லக்கைகளும் தனக்கு எதிராக ஓட்டுப்போட்டவர்களை எதிரிகளாகச் சாடுவது வெள்ளிடைமலையானது. அல்லது தான் இவ்வளவு லஞ்சம் கொடுத்தும் வாக்கு மாறி போனதின் மனக்கொதிப்பதை நஜீப்பால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாத முனகலாகவும் இது இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் தனக்கு எதிராக வாக்கைப் பதிவு செய்தவர்கள் மீது இவ்வளவு வெளிப்படையாக இனதுவேசம் செய்யும் ஒரு பிரதமரை நாம் கொண்டிருப்பது ஜனநாயகம் இறந்துபோனதற்கான ஒரு அடையாளமாக  எண்ணி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தலாம்.

சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும் ‘Apa lagi Cina mahu?’

utusanஅமர்களம் திரைப்படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூச்சுவிடாமல் என்னென்னவோ வேண்டும் எனப் பாடுவார். அதுபோல உத்துசான் கேட்ட கேள்விக்கு சீனர்கள் மட்டுமல்லாமல் மலாய் , இந்திய இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு என்ன வேண்டும் எனச் சொல்லாமல் பகிரங்கமாக என்ன வேண்டாம் எனச் சொல்லத் தொடங்கியுள்ளனர்.

அவர்களின் எல்லோருடய குரலும் ‘எங்களுக்கு இனவாதமான பாரிசான் வேண்டாம்’ என்பதாக இருந்தது.

ஒரு சமூகத்தை நோக்கி கேட்கப்பட்ட அம்னோ அரசின் இனவாதப் பேச்சுக்கு நாட்டில் எல்லா இனத்திடமிருந்து வந்த காட்டமான பதில்கள் இன்னமும் பாரிசானின் கள்ள அரசியல் செல்லாது என எடுத்துரைத்தது. சீனர்கள் ஓட்டுகளால் மட்டுமல்ல பெரும்பான்மையான மலாய்க்காரர்களும் பாரிசானை நம்பவில்லை என்பதை ஒப்புக்கொள்வது நஜீப் தன் இனவாத அரசை நடத்தத் தடையாக இருக்கலாம்.

மலேசிய அரசியலின் சனியன்

இந்த நிலையில் அனைவரும் எதிர்ப்பார்த்த அந்தச் சனியனின் குரல் ஒலிக்கத்தொடங்கியது. முன்பு அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்தது அந்த சனியனின் குரல்.  ’12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப் பெற்றுத்தந்த அப்துல்லாவைவிட நஜிப் சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்ததாகவும் நஜிப்பால் 133 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பெற்றுத்தர முடிந்தது’ என்றும் அந்த சனியனின் குரல் ஒலித்தது. பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தாம் நஜீப் நிர்வாகத்துக்காக தேர்தல் பரப்புரை செய்ததாக அக்குரல் சொன்னபோது மக்கள் அந்தச் சனியம் மஹாதீரின் குரலில் பேசுவதாக வெளியில் சொல்லிக்கொண்டனர்.

மலேசிய அரசியலின் காமடியன்

இந்தத் தேர்தலில் பக்கா காமடியன் பழனிவேல்தான். கொஞ்சம் கூட அரசியலுக்கு லாயக்கற்ற அவர், மஇகாவின் தலைவர் என்ற ஒரே தகுதியில் வெற்றிபெரும் தொகுதியான கேமரன் மலையைத் தேர்ந்தெடுத்து நின்று , அங்கும்  வெறும் 462 வாக்குகளில் வெற்றியடைந்துள்ளார். இவரோடு ஒப்பிடுகையில் அக்கட்சியில் வெற்றியடைந்த சுப்ரமணியம், கமலநாதன், சரவணன் போன்றவர்கள் தங்கள் தொகுதியில் கடந்த ஆண்டுகளில் செய்த சேவையைச் சொல்லி ஓட்டைப்பெற்று வென்றனர். ஆனால் பழனியோ எல்லா சாதகமான நிலையைக் கொண்டிருந்தும் சொற்பமான வாக்கில் வென்றது நிச்சயம் பூர்வக் குடிகளின் ஓட்டினாலும் பண அரசியலாலுதான் என்பது நேரடி சான்றுகள் சொல்லிய உண்மை.

இந்த நிலையில் பழனிவேல் மீண்டும் ம.இ.காவின் தலைவராக வந்தால் அதைவிட மலேசியத் தமிழனுக்கு வேறு அவமானமே வேண்டாம். எதற்கும் லாயக்கற்று மலைக்கு ஓடிப்போன ஒரு கோழை அடுத்த ஐந்து ஆண்டுகள் நமது தேவைகளை பூர்த்தி செய்வார் என்பது எவ்வளவு பெரிய காமடி.

தமிழர்களின் பிற்போக்குத்தனமும் சாதி அரசியலும்

Minister MIC-Palanivel & Samyநாம் 500 வெள்ளிக்கு சோரம் போனவர்கள் என ஆங்காங்கே நிரூபணமாகியுள்ளது. முழுமையாக ஆய்வு எதுவும் கிடைக்காத நிலையில் இளைஞர் அல்லாத பலரும் நஜீப் கொடுக்கும் 500 வெள்ளிக்குதான் பாரிசானுக்கு ஓட்டுப் போட்டேன் என பகிரங்கமாகச் சொல்வதைக் கேட்க முடிகிறது. ஒருவகையில் நாம் இவர்களைக் கோபித்து பயன் இல்லை. நமது அறிவார்ந்தவர்களின் குரல் இவர்களைச் சென்று அடையவில்லை. இவர்களுக்குப் புரியும் வகையில் உண்மைகள் இன்னும் சொல்லப்படவில்லை. பாரிசானும் அரசாங்கமும் ஒன்றென நம்பும் பாமர மனங்களிடம் நமது குரல் இன்னும் சேரவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் மலேசிய முக்குலத்தோர் அறிக்கை ஒன்றும் இந்தத் தேர்தலில் பரவலாக உளாவுவது கண்ணில் பட்டது. அதில் , சாமிவேலு தேவர் குலத்தை காத்த தெய்வம் என்றும், பழனிவேல் இந்தத் தேர்தலில் தோற்றால்தான் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் ம.இ.கா தலைவராக வரமுடியும் என பகிரங்கமாகச் சொல்லியிருந்தது.  அதோடு ‘கீழ்ச்சாதி தங்களை ஆழக்கூடாது’ என பதிவு செய்திருந்தது நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்ற குழப்பத்தையே ஏற்படுத்தியது.

இனவாதமே பிற்போக்கானது எனச் சிந்திக்கும் ஒரு காலக்கட்டத்தில் தமிழர்கள் சாதி அரசியலை அதில் புகுத்திப்பார்ப்பது வருங்காலத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது.இந்த சமுதாயத்திற்குத் தலைமை தாங்குவதாகச் சொல்லிக்கொண்ட சாமிவேலு போன்றவர்கள் எவ்வாறான எதிர்மறை விளைவை  அதன் அடிமட்டம் வரை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள் எனவும் அறிந்துகொள்ள முடிகிறது.

கடைசி நம்பிக்கைகள்

ஊடகங்கள், காவல்துறை, தேர்தல் வாரியம் என அனைத்தும் மக்கள் கூட்டணிக்காக இயங்காத நிலையிலும்  பண அரசியலை பாரிசான் செய்த போதிலும் , அந்நிய நாட்டவர் கள்ள ஓட்டுகள் என குவிந்த நிலையிலும் இந்தத் தேர்தலில் பாரிசான் வெறும் 47% லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், பாக்காதான் 50% மேல் வாக்குகளைப் பெற்று முன்னணி வகிக்கிறது.
ஆனால், பாரிசானே ஆட்சி பீடத்தைப்பிடிக்க அது வெற்றியடைந்த அதிகமான இடங்களே காரணம். இது எப்படி சாத்தியம் என ஆராய்ந்தோமானால், மிகக் குறைவான மக்கள்தொகை கொண்ட புற நகரங்களில்தான் அது தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளதையும் பாக்காதான் மக்கள் அதிகம் வாழும் இடங்களான பட்டணங்களில் இடங்களைக் கைப்பற்றியதையும் அறியமுடியும்.

2004ல்   198 தொகுதிகளைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பகுதிகள் வென்ற பாரிசான் 2008 ல் 140 ஆக குறைந்து 2013ல் 133ல் வந்து நிர்க்கிறது. அதேபோல 2004ல் வெறும் 21 இடங்களைத் தக்க வைத்துக்கொண்ட எதிர்க்கட்சி 2008ல் 82 ஆக உயர்ந்து  இவ்வாண்டில் 89 ஆக மேலும் தனது தரப்பை வலுப்படுத்தியுள்ளது.

அதே போல இத்தேர்தலில் எதிர்க்கட்சி வலுபெற சீனர்கள் மட்டும் காரணமில்லை என உணர வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. நாட்டில் 30 சதவிகித எண்ணிக்கையில் மட்டுமே சீனர்கள் உள்ளனர். அதாவது 11.2 லட்சம் ஓட்டுகளில் 3.3 லட்சம்  மட்டுமே சீனர்களுடையது . அதிலும் நான்கில் மூன்று பகுதியினர் மட்டுமே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என வைத்துக்கொண்டால் 2.5 லட்சம் வாக்காளர்களே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

Pakatan to Putrajayaபாக்காதான் 5.6 லட்சம் ஓட்டுகளைப் பெற்றுள்ள நிலையில் மீத எண்ணிக்கையான 3.1 லட்சம் ஓட்டுகள் நிச்சயம் இந்தியர் மற்றும் மலாய்க்காரர்களின் ஓட்டுகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எல்லா இனத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக இருக்கும் பட்சத்தில்தான் வெறும் 15% சீனர்களின் எண்ணிக்கை கொண்டு ஷா ஆலாமில் கூட அதனால் வெற்றியடைய முடிந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே இன்னமும் பாக்காதான் சீனர்களின் ஆதரவில் நிற்கிறது என்றும் நடந்து முடிந்த தேர்தல் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் நடந்த அரசியல் போராட்ட என்றும் சித்தரிப்பது தவறானது.

இறுதியாக

தேர்தல்களில் ஊழல் நடப்பது சகஜமாகிவிட்ட நிலையில், ஊழல் தன்மை கூடுவது மக்கள் அவ்வளவு அதிகமாக  ஆளும் அரசின் மேல் வெறுப்புடன் இருப்பதை உணர்த்திபடுத்தும். ஒட்டுமொத்தமாகவே இத்தேர்தல் ஊழலால் நிறைந்திருப்பது மக்களின் மனமாற்றத்துக்கு ஒரு சான்று. இதை சட்டம் போட்டு அடக்க முடியாது. அடக்கப் படும் போதுதான் புரட்சி கிளர்ந்து எழும் . பாரிசான் தனது ஒடுக்கு முறையை தொடரும் பட்சத்தில் அரசியல் கட்சிகள் சாராத மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

-ம.நவீன்