ஐபிஎப் போராட வேண்டும்!

8372209517_9ae8cb2f64_mகா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம்.

“எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை நான் ஐபிஎப்-இல்தான் இருப்பேன்” என்றவர் முன்னாள் சன்பெங் தமிழ்ப்பள்ளி மாணவரும் சுமார் மூன்று இலட்ச ஏழைத் தமிழர்களின் ஏக்கப் பெருமூச்சை தனது சுவாசமாகக் கொண்டிருந்த எம்.ஜி.பண்டிதன் ஆவார்.

ஏழைக் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்து சிறந்த மாணவராக திகழ்ந்து தனது உயிரைக்கூட மஇகா-வுக்கு பணயம் வைக்க பிணப்பெட்டியுடன் புறப்பட்டவர். ஒரு நீண்ட அரசியல் வாழ்க்கையின் எல்லையில் தன்னை நம்பிய அந்த ஏழைமக்களின் வாழ்வில் புன்சிரிப்பைக் காணத்  துடித்தவர்.

அவர் ஒரு சகாப்தம் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஓர் இனவாத அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் சற்றும் வியூகம் அற்ற வகையில் ஒரு முட்டாள்தனமான விசுவாசத்தைக் கொண்டு அதையே அரசியலாக்கி அவருக்கு அடி வணங்கிய பாமர மக்களைத்  தெரிந்தோ தெரியாமலோ அடிமையாக்கியதுதான் அவரின் குற்றமாக இன்றும் பதிவாகி வருகிறது.

மலேசிய அம்பேத்கர்

உலக அளவில் முதலாவது தலித் மாநாட்டை 1988-இல் மலேசியாவில் நடத்திய பெருமை ஐபிஎப்-பை தான் சாரும். சமூக அமைப்பு முறைகளில் பலிவாங்கப்படும் ஏழை மக்களுக்கு வலுவாக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர்  டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஆவார். அவரது தலித் விடுதலை என்பது அரசியல் வழிதான் அகற்ற முடியும் என்பதையும் அதற்கு அரசியல் போரட்டம் முக்கியம் என்பதையும் பண்டிதன் அறிந்திருந்தார் என்பதில் ஐயமில்லை. அதற்காக போராடினாரா என்பதில்தான் ஐயம் உள்ளது. போராடியிருந்தால் அவர் மலேசிய அம்பேத்கராக ஆகியிருப்பார்.

ipif_ஒரு மின்னல் கீற்று

மின்னல் கீற்று போல், ஒரு முறை பண்டிதன் கற்ற அரசியல் பாடம் அதே வேகத்தில் மறைந்தது. மஇகா–விலிருந்து 1988-இல் வெளியாக்கப்பட்ட போதுதான் அவர் அனைத்து மலேசிய இந்தியர் முற்போக்கு  முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். அதனை காகாசான் ராக்யாட் என்ற எதிர்க்கட்சி கூட்டமைப்பில் இணைத்து அக்டோபர் 1990 –இல் நடந்த எட்டாவது பொதுத்தேர்தலின் போது தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியைத் தழுவினாலும் அவரது தாக்கம் ஆறாவது மலேசிய திட்டத்தில் தென்பட்டது.

இந்தியர்களுக்காக அரசாங்கம்  ஒதுக்கீடு செய்யும் நிதியின் அளவு அதிகரிக்கப் பட்டது. உதாரணமாக 1990 முதல் 1995 வரையிலான ஆறாவது மலேசிய திட்டத்தில்  தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக ரிம 2.7 கோடி ஒதுக்கப்பட்டது.

1994-இல் பண்டிதன் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அனைத்து கட்சிகளும் தனது காலடியில் விழுந்ததைத் தொடர்ந்து, மீண்டும் நமது தமிழ்ப்பள்ளி  நிதி ஒதுக்கீடுகளில் மண் விழுந்தது. ஏழாவது மலேசிய திட்டத்தில் (1996-2000) ரிம 1.1 கோடியாகவும் எட்டாவது திட்டத்தில் (2001-2005) ரிம 1.38 கோடியாகவும் குறைக்கப்பட்டது. ஒன்பதாவது மலேசிய திட்டத்தில் (2006-2010) ஹிண்ராப்ட்  போராட்டம் காரணமாக நிதியின் அளவு ரிம 5.6 கோடியாக உயர்த்தப்பட்டது.

2008-இல் நடந்த 12-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்ததோடு சிலாங்கூர், பினாங்கு, கெடா மாநில ஆட்சிகளையும் இழந்தது. அதைத் தொடர்ந்து 2009-இல் பிரதமர் பதவியேற்ற நஜிப் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதியைச் சுமார் ரிம 50 கோடிக்கும் அதிகமாக உயர்த்தினார்.

அழுத பிள்ளைதான் பால் குடிக்குமா?

ipf 3அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பது போல் இந்த நடைமுறை  தோன்றினாலும், இதன் அரசியல் தத்துவம் அதற்கும் அப்பாற்பட்டது.

மக்களை ஒரு வகையான அடிமைத்தனம் கொண்ட பண்பாட்டுக்குள் அடைத்து விட்டால் அவர்களைச் சுலபமாக கையாள இயலும். அதற்கான ஒரு வழிமுறை உணவு என்பதை அவர்களின் வாழ்க்கைக்கு மையமாக்குவதாகும். உணவுக்காக உழைக்கும் மக்களைத்தான் சுலபமாக அடிமையாக்க இயலும். குடும்பமாக வாழும் இவர்களுக்கு உணவுக்கு அடுத்த கட்ட நிலையில் எதுவும் இருக்காது. எனவே இவர்களால் உண்டாக்கப்படும் அடுத்த சந்ததியினரும் அவ்வகையிலேயே இருப்பார்கள். வறுமையில் வாழும் இவர்களுக்குத் தங்களது அன்றாட வாழ்க்கையே ஒரு போராட்டமாகத்தான் இருக்கும்.

இதில் இருந்து விடுபட்டு முன்னேற வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி பயில வேண்டும், தொழில் கற்க வேண்டும், சேமிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் இருப்பினும், இதிலிருந்து விடுபட இவர்களின் சுய முயற்சிக்கும் அப்பாற்பட்ட வகையிலே மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

அவைதான் சமூக பொருளாதார மாற்றங்களாகும். இவை தாமாகவே வராது. இவற்றைக்  கோருவதற்கு முக்கியமானது அரசியல் விழிப்புணர்ச்சியாகும். அதனால்தான் அம்பேத்கர் போன்றவர்கள் சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அரசியல் உரிமை கோரி போராடினார்.

ஐபிஎப் விசுவாசம் அடிமைத்தனமானது

IPF 1ஐபிஎப் கட்சியை வழி நடத்திய பண்டிதன், அரசியல் விழிப்புணர்ச்சியிருந்தும் தனது கட்சியை ஆளும் வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் அடிமையாக்கினார். அதற்கு காரணம், அவர் கட்டுண்டு கிடந்த கட்சி அரசியலில் இருந்து அவரால் விடுதலை பெற இயலவில்லை.

மஇகா-வின் வலிமை மிகுந்த தலைவரான சாமிவேலுக்கு அடிபணிந்தும், தேசிய முன்னணியின் அம்னோவுக்கு அடிபணிந்தும் தனது அரசியலை நடத்தினார். 1981 முதல் 1988 வரை மஇகா-வின் உதவி தலைவர்களில் ஒருவராக இருந்த பண்டிதன், 1986 தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக வென்றதின் வழி வாணிப தொழில் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தான் சார்ந்த மக்களின் பிரச்சனை களைய இயலாததை உணர்ந்த பண்டிதன், தனது அரசியல் பலத்தை மஇகா-வில் காட்ட முற்பட்டார். அதற்காக அவர் ஜுன் 2, 1988-இல் தற்காலிகமாக நீக்கப்பட்டார். தனது விசுவாசத்தை நிருபிக்க ஒரு சவப்பெட்டியுடன் அவர் மஇகா தலைமையகம் முன்பு உண்ணா விரதத்தைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, ஜுலை 16, 1988 அவர் அக்கட்சியிலிருந்து வெளியாக்கப்பட்டார்.

இதுதான் கட்சி அரசியல் கலாச்சாரம் ஆகும். அம்னோவின் ஆதிக்கம் இது போன்ற அடிமை வழி கட்சி அரசியலை மட்டுமே அனுமதித்தது. அதில் யார் இருந்தாலும் அவர்கள் அந்த அடிமைத்தனத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். மஇகா-வின் முக்கிய பணியே அதுதான்.

வெளியான பண்டிதனின் ஆரம்பம் சரியாக இருந்தது. ஆனால், அவர் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவாக 1994 –இல் செயல்படத் தொடங்கியது, வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாக முடிந்தது. ஐபிஎப் மீண்டும் தங்களை அரசியல் அடிமையாக்கியவர்களிடமே தஞ்சம் புகுந்தது. அதன் குறிக்கோள் தேசிய முன்னணியில் உறுப்பியம் பெறுவதாகும்.

ஐபிஎப்-இல் வியூகமற்ற வலிமையுள்ளது

ipf 7அன்னார் பண்டிதன் ஏப்ரல் 30, 2008 இல் காலமானார். அதனை தொடர்ந்து  ஐபிஎப் தலைமைத்துவ பிரச்சனைகளுக்கு உள்ளானது. ஏழு மாதங்களுக்குப்  பிறகு பண்டிதனின் துணைவியார் ஜெயஸ்ரீ தலைவரானார். அவரைத் தேர்வு செய்த பொதுக்கூட்டம் செல்லாது என சங்க பதிவதிகாரி அறிவித்தார். அதன் பிறகு நடத்தப்பட்ட கட்சி தேர்தலின் வழி எம். சம்பந்தன் அதன் தலைவரானார். அதே வேளை எம்.என் மதியழகன், செங்குட்டுவன் போன்றவர்களும் ஆதரவாளர்களுடன் ஐபிஎப் சார்ந்த அமைப்புகளில் இருந்து வருகின்றனர்.

பிளவுகளால் பின்னப்பட்ட போதும் அதில் உள்ள பிரிவுகள் அனைத்தும்  தேசிய முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் காலங்களில் செயல்படுவதைக் காணலாம். அவர்களின் இந்த அடிமை விசுவாசம் பண்டிதன் அவர்களால் வழங்கப்பட்டதாகும்.

2008-க்கு பின்பான நாட்டு அரசியலில் மிகவும் மோசமான வகையில் பின்தள்ளப்பட்டுள்ள சமூகங்களில் ஐப்எப் கட்சியினரும் அடங்குவர். இதை இவர்கள் உணராமல் இல்லை.

உதாரணமாக, “பயன் படுத்தி விட்டு வெளியே விட்டு செல்லும் சிலிப்பர் அல்ல நாங்கள்” என்ற அவர்களின் சுய விமர்சனம், அவர்களது சமூக நிலையைக்  காட்டுகிறது. ஆனால், அவர்கள் கேட்கும் கோரிக்கை அவர்களது முதிர்ச்சியற்ற அரசியல் எதார்த்தத்தையே காட்டுகிறது.

ஐபிஎப் தங்களுக்கு அரசாங்கத்தில் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் அவர்களின் பிரச்சனை அதற்கும் அப்பாற்பட்டது என்பதை அவர்களால் உணர இயல வில்லை.

இழப்பதற்கு இனி எதுவும் இல்லை

தற்போது உண்டாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்கள் பல புதிய கதவுகளைத்  திறந்துள்ளது. அதில் பங்கு பெற வேண்டுமானால், ஐபிஎப் விடுதலை பெற வேண்டும். அது தனது அடிமைத்தன அரசியலுக்கு விடை கொடுக்க வேண்டும். 1990 முதல் 1994 வரையில் தேசிய முன்னணியிலிருந்து விடுபட்டு வாழ்ந்த காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

2008 முதல் தேசிய முன்னணியை நம்பி வாழ்ந்த மசீசா, பிபிபி, கெரா க்கான், மஇகா போன்ற கட்சிகள் அடைந்த தோல்வியைக் கணிக்க வேண்டும்.

ஐபிஎப் கட்சியினர் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நாட்டின் நீரோட்டத்தில் இருந்து விடுபட என்ன காரணங்கள் என்பதையும் அவர்களுக்கான கொள்கை வழிமுறைகளை யாவை என்பதையும் ஆய்வுகளுக்கு உள்ளாக்க வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக வரையரை செய்ய வேண்டும். அதனை அரசாங்கத்திடம் சமர்பித்து, செயலாக்க வழி முறைகளை கோர வேண்டும்.

அதே வேளையில் அரசாங்க நியமனம் எதையும் எடுக்காமல், தேசிய முன்னணிக்கான ஆதரவைத்  தாங்கள் பரிசீலனை செய்வதாகவும், அதன்படி தங்களுக்கான திட்டங்களை அறிவிக்காவிடில், புதிய அரசியல் கோரும் வகையில் ஒரு விழிப்புணர்ச்சி பேரணியை மேற்கொள்ள போவதாக அறிவிக்க வேண்டும்.

அதன் எல்லை என்பது தேசிய முன்னணியிலிருந்து விலகி மாற்று அரசியலுக்கு செல்வதாகும். இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் போராட்டம் மட்டுமே அரசியல் பலத்தைக்  கொடுக்கும் என்பதுதான் வரலாறு. இதை உணருபவர்களே ஐபிஎப்-க்கு வழி காட்ட இயலும்.