மலேசியாவின் இருண்ட காலம்

13GE‘நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு’ என்று யாரோ கொடுத்த குரலைக் கேட்டுத் தேர்தல் நாட்டாமை பொதுத்தேர்தல் 13இன் முடிவைக் கச்சிதமாக மாற் றிச் சொல்லிவிட்டார்.

‘எங்கள் வெற்றி கொள்ளையடிக்கப்பட்டது’ என்று முடிவைக் கேட்ட அடுத்த வினாடியே மக்கள் கூட்டணி அறிவித்தது. இது பொத்தாம் பொதுவாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. 27 தொகுதிகளில் தேர்தல் மோசடி நடந்துள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றி மக்கள் கூட்டணி கண்டறிந்துள்ளது.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அன்று மட்டுமல்ல, தேர்தல் அன்றும் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பும் தொடர்ந்து நடந்து வந்த முறைகேடுகள் பற்றி ‘பெர்சே’ இயக்கமும் மக்கள் கூட்டணியும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தன. தேர்தல் ஆணையம் கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு தனது ‘எஜமானர்’ இட்ட கட்டளையை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தது. எல்லா முறைகேடுகளையும் தாண்டிக் கொண்டு பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாய் விழுந்தன. விழுந்து என்ன செய்ய? தொடக்க நிலை கணிப்புகள் முன் வைத்த முடிவுகள் ஓரிரு மணி நேரத்தில் மாற்றப்பட்டன.

மக்களாட்சி கொண்டிருக்கும் கருவிகளில் ஆகச் சிறந்த நாகரீகமான கருவி தேர்தல் மட்டுமே. தேர்தல் என்ற அந்தக் கருவியால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பம்தான் மக்களாட்சி. அந்தக் கருவியும் களவாடப்பட்டது என்றால் மக்களாட்சி மரணித்தது என்றே கருத வேண்டும். பொதுத் தேர்தல் 13 இதை உறுதிப்படுத்திவிட்டது. பெரும்பான்மை மக்கள் மக்கள் கூட்டணிக்கு வாக்களித்திருந்தும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது வியப்பிலும் வியப்பு. இது தேர்தல் ஊழலின் உச்சம்!

400 கோடி ரிங்கிட் அடைமழையாக வாக்காளர் தலைகளின் மீது பொழிந்திருக்கிறது. தேர்தல் அன்று கூட நூறு, இருநூறு என்று பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தேர்தல் நடந்த விதம் முடிந்த விதம் எல்லாமே ஜனநாயகத்தின் முகத்தில் பணநாயகம் காறி உமிழ்ந்திருப்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்துவிட்டாலும் சீனர்கள் ஆதரவை இழந்து விட்டதைக் குறித்து எழுந்த சொல்லாடல்கள் சூழ்நிலையை இன்னும் கடுமையானதாக ஆக்கி வருகிறது.

najib3தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொண்டு உரையாற்றிய பிரதமர் அவர் முகத்திலேயே ஓங்கி அறைந்து கொண்டது போல் ஒரு கருத்தைச் சொன்னார். ஒரே மலேசியா என்று கடந்த சில ஆண்டுகளாக முழங்கி வந்தவர் இது ‘சீனர் சுனாமி’ என்று சொன்ன மாத்திரத்தில் ஒரே மலேசியா நொறுங்கி நூறு துண்டானது.

குறிப்பிட்ட ஓர் இனம் தங்களை ஆதரிக்கவில்லை என்று சொன்னபோது அவர்கள் ஒரே மலேசியாவின் மலேசியர் என்பதைப் பிரதமர் மறுதலித்திருக்கிறார். அப்புறம் என்ன ஒரே மலேசியா?

அரசியலமைப்புச் சட்டம் 153 ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதையும் மலாய் மேலாண்மையே நிர்வாக முறையாக இருப்பதையும் மலேசியர் அனைவரும் தெளிவாக அறிந்திருக்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் பாரிசானின் இனவாத மேலாண்மையை நன்கு அறிந்துள்ளனர். இதையெல்லாம் டத்தோஸ்ரீ நஜிப் அறியாதவரல்லர். இனவாதம் அவர் ஆழ்மனத்தில் தேங்கிக் கிடந்ததால்தான் தேர்தல் முடிவுக்குப் பிந்திய முதல் உரையிலேயே அவர் அப்படிச் சொல்ல நேர்ந்தது.

இப்படிச் சொன்னதில் அவர் இன்னொரு குற்றத்தையும் செய்திருக்கிறார். வாக்குரிமை மக்கள் உரிமை, அது  மக்களாட்சியின் மாண்பு. தனக்கு வாக்களிக்காதவர்கள் கெட்டவர்கள் என்பதைப் போன்ற குத்தல் வார்த்தைகளால் மக்களாட்சியின் முகத்தில் அவர் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.

சீனர் சுனாமி என்று தலைவர் சொல்லிவிட்டதால் தொண்டர்கள் எல்லாரும் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ‘இன்னும் என்ன வேண்டும் சீனர்களுக்கு’ என்று உத்துசான் மலேசியா தனக்கே உரிய ‘வத்தி வைக்கும்’ வேலையைச் சிறப்பாகச் செய்துவிட்டது.

நாடு நாளுக்கு நாள் உண்மையான ஒருமைப்பாட்டை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இனவாதம் இல்லாத, எல்லாரும் மலேசியர் என்ற உணர்வு கடந்த 56 ஆண்டுகளில் ஓர் அங்குலம் கூட முன் நோக்கி நகரவில்லை. ஆனால் பின் நோக்கித் தள்ளப்படும் நிகழ்வுகள் மட்டும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Education DG and ex-top judgeதமிழ், சீனப் பள்ளிகளை மூடுங்கள் என்று வெளிப்படையாகக் கூறுதல், உயர் கல்விக் கூடங்களில் இட வாய்ப்பு மறுத்தல், மெட்ரிகுலேசன் கல்வியில் வாய்ப்பு இன்மை, கிடைத்துத் தேறினாலும் உரிய உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுதல், கல்வி உதவி, வெளிநாட்டுக் கல்வியில் புறக்கணிப்பு, அரசுப் பணிகளில் தகுதி உள்ளவர்களுக்கும் வாய்ப்பு இன்மை, அரசுக் குத்தகை, வணிக உரிமம் இப்படி எல்லாமே ஒருமைப்பாட்டின் வேர்களில் நஞ்சை வார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த இனவாதத்தால் சேதாரம் கண்டவர்கள் தங்களுக்கு ஆதாயமாக இருக்கவில்லை என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

அரசியல் அமைப்புச் சட்டம் 153 வழியாகச் சிறப்புச் சலுகை சமுதாயமாக பூமிபுத்ராக்கள் அனைத்தும் பெற்றுக் கொள்கிறார்கள். அப்புறம் ஏன் பாஸ் வழியாகவும் பி.கே.ஆர் வழியாகவும் பூமிபுத்ராக்கள் அம்னோ பாரிசானை எதிர்த்து வாக்களிக்கின்றனர்? ‘இன்னும் என்ன வேண்டும் பூமிபுத்ராக்களுக்கு’ என்று நம்மால் கேட்க முடியாதா?  கேட்கலாம். இது  போன்ற  பாமர விமர்சனங்களை விட்டுச் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அறிவார்ந்த ஆய்வுகளால் உரிய விடையைத் தேடுவதே புத்திசாலித்தனம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

கப்பலில் ஆயிரம் ஓட்டைகள். ஒவ்வோர் உறுப்புக் கட்சியும் தனித்தனியே கிழடு தட்டிப் போய்விட்டது. ஒவ்வொன்றுக்குள்ளும் பல கூடாரங்கள். குத்துவெட்டுகள். நீண்ட கால ஆட்சியில் ஊழல் கை வந்த கலையாகிவிட்டது. ‘அடுத்தும் நம்ம ஆட்சிதான்’ என்ற மிதப்பில் ஊழல் நெடுந்தொடர் நாடகமாகிவிட்டது. திடீரென ஆட்சி நாடகத்திற்குச் சுபம் போட முடியாத காரணத்தால்தான் எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பது பாரிசானுக்குக் கட்டாயமானது.

ec1தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு  விளக்கம் சொல்லாமல் அடுத்த தேர்தலுக்கான தொகுதி திருத்த வேலைகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. இந்தத் திருத்தங்களிலும் நேர்மை தலை காட்டாது என்பது சர்வ நிச்சயம்.

‘இனி வரும் தேர்தல்களும் நேர்மையான தேர்தல்களாக இருக்க மாட்டா. ஆகவே வலுக்கட்டாயமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்’ எனறு மக்கள் கூட்டணியும் அதன் ஆதரவாளர்களும் பெருந்திரளாகக் கூடித் தங்கள் போராட்ட உணர்வைக் கூர் தீட்டுகின்றனர். கூடுகின்றவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். உயர்கல்வி மாணவர்கள். பல மூன்றாம் உலக நாடுகளிலும் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் மக்களாட்சிக்கு மானக்கேடு வந்தபோது மாணவர்கள் கொதித்தெழுந்து செய்த புரட்சிகள் நமக்கும் முன்மாதிரி ஆகிவிடக் கூடாது.

ஆள்வோரும் ஆளப்படுவோரும் மக்களாட்சியின் விழுமங்களைப் போற்றிச் செயல்பட வேண்டிய நேரம் இது. மக்களிடையே ஒருமைப்பாட்டையும் ஆட்சி முறையில் நேர்மையையும் வலிமைப்படுத்த வேண்டியது ஆள்வோரின் கடப்பாடு. எதிர்க் கட்சியினரையும் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தாம் என்பதை மறுத்து ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இதுவும் செய்வோம் இன்னமும் செய்வோம் என்ற போக்கில் ஆள்வோர் நடந்து கொண்டால் மலேசியா எளிதில் மீள முடியாத ஓர் இருண்ட காலத்திற்குள் நுழைவதை நம் காலத்திலேயே காண வேண்டி வரும்.

-முனைவர் ஆறு. நாகப்பன்