அல்லாஹ் விவகாரம்: நஜிப்பின் 10 கட்டளைகள் ஒரு கண்துடைப்பா?

-ஜீவி காத்தையா, செம்பருத்தி. கோம்.  ஆகஸ்ட் 20, 2013 

இந்நாட்டில் அல்லாஹ் என்ற சொல்லை இஸ்லாமியர் அல்லாதவர்கள் பயன்படுத்துக் கூடாது. ஆண்டவனை குறிக்கும் அச்சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கடுமையான போக்கு நிலவுகிறது.

1-hamidi1“அல்லா என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது விசேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது. இதை இஸ்லாமியர் அல்லாதவர்கள் மதிக்க வேண்டும். இதில் விட்டுக் கொடுக்க இயலாது”, என்று தற்போதைய உள்துறை அமைச்சர் அஹமட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். (தமிழ் நேசன், 18.8.2013).

இதே அடிப்படையில்தான் மலேசிய கத்தோலிக்கர்களின் வெளியீடான த ஹெரால்ட் அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடைவிதித்தது.

இத்தடையை அகற்றக் கோரி மலேசிய கிறிஸ்துவ சம்மேளம் கோலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அவ்வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லாவ் பீ லான் “அல்லாஹ்” என்ற சொல்ல பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி த ஹெரால்ட் வெளியீட்டிற்கு அரசாங்கம் விதித்திருந்த தடையை அகற்ற உத்தரவிட்டார்.

நீதிபதி லாவ் பீ லான், “அல்லாஹ்” என்ற சொல் இஸ்லாத்திற்கு மட்டும் தனிப்பட்டதல்ல என்று அவரது தீர்ப்பில் கூறினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பு டிசம்பர் 31, 2009 இல் வழங்கப்பட்டது.

இத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீதான மேல்முறையீடு நீதிமன்ற விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 10 இல் தொடங்கவிருக்கிறது.

ஆனால், இந்த அல்லாஹ் விவகாரத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்ட ஈராண்டு காலத்திற்குள் பிரதமர் நஜிப் 10 கட்டளைகள் (10 Commandments) போன்ற 10 அம்ச தீர்வுகள் என்ற ஒன்றை அறிவித்தார்.

அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த 10 அம்ச தீர்வை பிரதமர் நஜிப் ஏப்ரல் 11, 2011 இல் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் இங் மூன் ஹிங்கிடம் அளித்தார்.

najib-razak aஅந்த 10 அம்ச தீர்வுகள்:

1. பகசா மலேசியா/இந்தோனேசியா உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள பைபிள்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யலாம்.

2. இந்த பைபிள்களை தீவகற்ப மலேசியா, சாபா மற்றும் சரவாக்கிலும் கூட அச்சிடலாம். இது ஒரு புதிய முன்னேற்றம். இதனை கிறிஸ்துவ தரப்பினர்கள் வரவேற்க வேண்டும்.

3. சாபா மற்றும் சரவாக்கின் இபான், கடஸான் டூசுன் மற்றும் லுன் பாவாங் போன்ற பூர்வீக மொழிகளிலுள்ள பைபிள்களை உள்ளூரில் அச்சிடலாம், இறக்குமதியும் செய்யலாம்.

4. சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பெரும் கிறிஸ்துவ சமூகம் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மொழிகளிலும் உள்ள, மலேசியா/இந்தோனேசியா மற்றும் பூர்வீக மொழிகள் உட்பட, பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கோ, உள்ளூரில் அச்சிடுவதற்கோ எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எவ்வித முத்திரை அல்லது தொடர்
எண் இடுவதற்கான தேவையும் இல்லை.

5. பெரிதான முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு, மலேசிய தீவகற்பத்தில், மலாய்/இந்தோனேசிய மொழி பைபிள்கள் “கிறிஸ்துவ பதிப்பு” என்ற சொற்களையும், சிலுவை சின்னத்தையும் முகப்பட்டையில் கண்டிப்பாக அச்சிட்டிருக்க வேண்டும்.

6. ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும், அதிகமான மக்கள் சாபா, சரவாக் மற்றும் தீவகற்ப மலேசியாவுக்கிடையில் பயணிப்பதைக் கவனத்தில் கொண்டும், அவ்வாறான பயணத்தின் போது மக்கள் தங்களோடு கொண்டு வரும் பைபிள்கள் மற்றும் கிறிஸ்துவ பொருள்கள் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.

7. பைபிள் பற்றிய அமைச்சரவையின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமல்படுத்தத் தவறும் அதிகாரிள் பொது உத்தரவுகள் விதிகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சம்பந்தப்பட அரசு பணியாளர்கள் இந்த உத்தரவை நன்கு புரிந்து கொண்டு அதனை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கா அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்துறை தலைவர் உட்பட, விசாலமான விளக்கம் அளிப்பார்கள் (இணப்பு 1 ஐ காண்க).

8. கூச்சிங், கிடெயோனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30,000 பைபிள்களை அவற்றின் இறக்குமதியாளர் எவ்விதக் கட்டணமுமின்றி பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஏற்பட்ட செலவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதே போன்ற முன்வைப்பு போர்ட் கிள்ளானில் 5,100 பைபிள்களை இறக்குமதி செய்தவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனை கடந்த வாரம் மலேசிய பைபிள் மன்றம் (பிஎஸ்எம்)
பெற்றுக்கொண்டு விட்டது.

9. கிறிஸ்துவ விவகாரங்களுக்கு அப்பால், சமயங்களுக்கிடையிலான விவகாரங்கள் மீது கவனம் செலுத்தவும், அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சமய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும் கிறிஸ்துவ மற்றும் இதர பல்வேறு சமயங்களுடன் செயல்பட அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை அது மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இப்பணிக்கு
முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நாட்டிலுள்ள இதர சம்பந்தப்பட்ட சட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பிரதமர் என்ற எனது தகுதியில் இதற்கு ஒரு முன்னேற்றகரமான வழி வகுப்பது குறித்து விவாதிக்க விரைவில் நான் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் (சிஎப்எம்) பிரதிநிதிகளைச் சந்திப்பேன்.

10. எனது அமைச்சரவையின் கிறிஸ்துவ அமைச்சர்கள் ஒரு முறையான அடிப்படையில் பல்வேறு கிறிஸ்துவ தரப்பினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடும் என்னோடும் பணியாற்றுவார்கள். இந்நாட்டின் தலைவர் என்ற முறையில், நாட்டின் அனைத்து சமயப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நமது சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளைச் சரிக்கட்டுவதற்கான தேவை இருக்கிறது. இதனை அடைவதற்கு மரியாதை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன்.

இந்த 10 அம்ச தீர்வுகள் அறிவிக்கப்பட்டு ஈராண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தீர்வு கண்டுள்ளதா என்றால், இல்லை என்றே கூற வேண்டும்.

அமைச்சரவையின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்ட இந்த 10 அம்ச தீர்வுகளை எந்த அளவிற்கு அமைச்சரவை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்?

இந்த10 அம்ச தீர்வுகளில் ஏழாவது அம்சம் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) இத்தீர்வுகள் அமல்படுத்தப்படுவதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறுகிறது. இந்த உத்தரவை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அந்நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் கூறுகிறது. இந்த விளக்கம் அளித்தவர்களில் மிக முக்கியமானவர் சட்டத்துறை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமச்சரவையின் முடிவிற்கு கட்டுப்பட்டவர்களில் ஒருவர் உள்துறை அமைச்சராகும். அதே கடப்பாடுடையவர் சட்டத்துறை தலைவர். பிரதமர் நஜிப்பின் 10 அம்ச தீர்வுகள் இவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படுகிறா? இல்லை.

த ஹெரால்ட் வெளியீட்டிற்கு எதிரான தடையை நீக்கி கோலாலம்பூர் நீதிமன்றம் டிசம்பர் 31, 2009 இல் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை நடத்துபவர் சட்டத்துறை தலைவர்.

நஜிப்பின் 10 அம்ச தீர்வுகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை உள்துறை அமைச்சிடம் விடப்பட்டிருக்கிறது.  ஆனால், இன்றைய உள்துறை அமைச்சர் அஹமட் சாஹிட் ஹமிட் இவ்விவகாரத்தில் தீவிரப் போக்கை கொண்டுள்ளார் என்பது அவர் ஆகஸ்ட் 17 இல் விடுத்த அறிக்கை தெளிவாகுகிறது. நஜிப்பின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிர்மாரானதாக இருக்கிறது அவரின் அறிக்கை.

ஆக, பிரதமர் நஜிப் அமைச்சரவையின் ஒப்புதலோடு எடுத்த ஒரு முடிவை உள்துறை அமைச்சர் ஹாமிடி பகிரங்கமாக நிராகரித்துள்ளார். அல்லாஹ் விவகாரத்தில் விட்டுக் கொடுக்க இயலாது என்ற அவரின் பகிரங்க அறிக்கை எதிர்வரும் அம்னோ தேர்தலை குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், அது அமைச்சரவையின் முடிவை மீறியதாகும்.  மேலும், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள அரசாங்கத்தின் செயல்பாடு நஜிப்பின் 10 அம்ச தீர்வுகளை கேலிக்கூத்தாக்கியுள்ளது. நஜிப் அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் ஹமிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலையில் நஜிப் இருக்கிறாரா? அரசாங்கத்தின் மேம்முறையீட்டு செயலை நஜிப் தடுத்து நிறுத்தாமல் இருப்பது ஏன்?

அல்லாஹ் விவகாரத்தில் நஜிப் வெளியிட்ட 10 அம்ச தீர்வுகள் பகிரங்கமாக அவரது அமைச்சரால் மீறப்படுவது குறித்து எந்த அறிவிப்பும், நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நஜிப்பும் இதற்கு உடந்தையாக இருக்கிறார் என்று கூறலாம். அதுதான் உண்மை என்றால், நஜிப்பின் 10 அம்ச தீர்வுகள் வெறும் கண்துடைப்புதான்.

மேலும், பிரதமர் நஜிப் இந்த அல்லாஹ் விவகாரத்தில் மௌனம் சாதிப்பது அவர் அமைச்சரவையின் ஒப்புதலோடு அறிவித்ததாகக் கூறப்படும் 10 அம்ச தீர்வுகள் கடந்த 13 ஆம் பொதுத் தேர்தலில் கிறிஸ்துவர்களின் வாக்குக்களைக் கவர்வதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட  திட்டம் என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுத் தேர்தல் முடிந்து விட்டதுடன் அவரின் 10 அம்ச தீர்வுகள் நிலைநிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உள்துறை அமைச்சர் ஹாமிடியின் நிலைப்பாடு தெளிவாகக் காட்டுகிறது. நஜிப்பின் 10 அம்ச தீர்வுகள் வெறும் தேர்தல் நாடகம் என்றால், இச்செயல் மலேசிய கிறிஸ்துவர்களையும், மலேசிய மக்களையும் ஏமாற்றுவதற்காகத் தீட்டப்பட்ட  நம்பிக்கை துரோகச் செயலாகும்.