அக்கா ஸ்ருதிஹாசனை போல இந்தியில் ஹீரோயினாக களம் இறங்க இருக்கிறார் அக்ஷ்ராஹாசன்.
நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் ஸ்ருதிஹாசன் பாடகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின்னர் இசையமைப்பாளராகி தற்போது ஹீரோயினாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இளையவர் அக்ஷ்ராவுக்கு சினிமாவில் நடிக்க நிறைய ஆபர்கள் வந்தும் அவர் வேண்டாம் என மறுத்துவிட்டார். தனக்கு திரையில் தோன்ற விருப்பமில்லை என்றும், திரைக்கு பின்னால் அதாவது இயக்குநராகவே விருப்பம் என்றும் கூறி வந்தார். ஏற்கனவே சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் அக்ஷ்ராவும் இப்போது ஹீரோயினாக களம் இறங்க இருக்கிறார். சீனிகம், பா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல டைரக்டரும், கமல்ஹாசனின் நண்பருமான பால்கி, அடுத்து இந்தியில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
இதில் அக்ஷ்ராஹாசன் தான் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அக்ஷ்ரா தீவிரமாக நடிப்பு பயிற்சியிலும் இறங்கியுள்ளார்.