வானம் பார்த்த பூமியில் மானவாரி நெல்: விவசாயிகள் மகிழ்ச்சி

crop_foodகாஞ்சிபுரம் அருகே உள்ள சில கிராமங்களில் வானம் பார்த்த பூமியில் அண்மையில் பெய்து வரும் மழைக்கு மானவாரி நெல் பயிர்கள் முளைவிட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர், ஒழையூர், மேட்டூர், கரூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான புஞ்சை நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களில் வேர்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களையும், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களையும் விவசாயிகள் விளைவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தை நெல் விளைவிக்கும் வகையில் பதப்படுத்தினர்.

இதன்படி தரமான நெல் விதைகளைக் காய வைத்து ஏர் கலப்பை மூலம் தூவி விதைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் இந்த நெல் விதைகள் முளைக்க தொடங்கியுள்ளன.

இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஒழையூர் விவசாயி ஒருவர் கூறியது:

இந்த பகுதியில் உள்ள ஏரி நீர், விவசாயப் பாசனத்துக்கு பயன்படாத வகையில் உள்ளது. இதனால் மழையை நம்பி மட்டும் இங்கு விவசாயம் உள்ளது.

கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் நிலங்களை உழுது, நெல் விதைகளைத் தூவி இருந்தோம்.

இப்போது கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால் நெல் விதைகள் முளைக்க தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு தொடர்ந்து மிதமான மழை பெய்யும்பட்சத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்றார் அவர்.

இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியது:

மழைக்காலத்துக்கு முன்பு விவசாயத்துறை அதிகாரிகள் மானவாரி நிலங்கள் மற்றும் நன்செய் நிலங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இதற்காகத்தான் விவசாயத்துறை களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் கிராமங்களுக்கு வருவதே கிடையாது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கந்து வட்டிக்கு பணம் வாங்கித்தான் அதிக விலைக்கு விதைகளை வாங்க வேண்டியுள்ளது.

எனவே விவசாய நிலங்களை ஆராய்ந்து, எந்த நிலத்தில் என்ன பயிரிடலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

இதனை வேளாண்மைத்துறை அதிகாரிகள் முறைப்படுத்தினாலே விவசாயம் செழிக்கும் என்றார்.

TAGS: