விக்னேஸ்வரனின் உதாரணமும் சீமானின் கண்டனமும்

seemanஇலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

குறிப்பாக இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று தமிழக அரசியல்வாதிகள் சொல்வதால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மோசமாக பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சனை என்பது கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனையைப் போன்றது என்று தெரிவித்திருந்த விக்னேஸ்வரன், சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதிகள் சிலசமயம் சேர்ந்துகொள்வதைப்போல தாங்கள் இணைந்தும் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் கணவன் மனைவி சண்டையில் அண்டைவீட்டுக்காரர் தலையிட்டு சண்டையிடும் கணவன் மனைவி விவாகரத்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதைப் போல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

vikneswaran-150x125விக்னேஸ்வரனின் இந்த கருத்துக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்திருந்தார். இது குறித்து சீமான் அளித்த செவ்வியில், ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கும் ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானத்தவர் ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்களே தவிர தமிழ்நாடோ, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளோ முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

மேலும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று விக்னேஸ்வரன் கூறுவதும் தவறு என்ற சீமான், தமிழ்நாட்டிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களும் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே வின்கேஸ்வரன் வேட்பாளராக போட்டியிடும் வடமாகாண தேர்தலையே இலங்கை அரசு நடத்துகிறது என்றும் வாதிட்டார்.

தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனை என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருப்பதைப் போன்றதுதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், அதே பேட்டியில் இந்திய அரசின் தலையீட்டை மட்டும் பாராட்டுவதாக தெரிவித்த சீமான், “ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை அவர் விளக்க வேண்டும்”, என்றும் கேள்வி எழுப்பினார். -BBC

TAGS: