மூத்த தலைவரான அத்வானிக்கு கோபப்பட உரிமை உண்டு என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஷயத்தில் மூத்த தலைவரான அத்வானி அதிருப்தியில் இருப்பதாகவும், தன்னைப் புறக்கணித்து இந்த முடிவை கட்சி எடுத்ததில் அவர் கோபமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் மும்பையில் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து அவர் கூறியது:
அத்வானி எங்களின் தலைவராகவும், வழிகாட்டியாகவும் தொடர்ந்து நீடிக்கிறார். கோபப்படுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. இந்த விவகாரத்தை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். அதைத் தீர்க்க முயற்சிப்பேன். அவரைத் தனிப்படுத்தும் கேள்வியே எழவில்லை.
அவருக்குப் பதிலடி கொடுக்கும் நிலையில் நான் இல்லை. குடும்பத்தில் யாரையாவது அதன் காப்பாளர் திட்டினால், அதற்காகக் குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாக அர்த்தமில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்படக் கூடாது என்று அத்வானி எப்போதும் கூறவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு சில கட்சிகள் வெளியேறியுள்ளன. புதிய கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்க நான் முயற்சிப்பேன். புதிய கட்சிகளைச் சேர்க்கும் முன் இப்போதுள்ள கட்சிகளைக் கலந்து ஆலோசிப்போம். மோடி குறித்த கட்சியின் முடிவை எங்கள் கூட்டணிக் கட்சிகளான சிவசேனையும் சிரோமணி அகாலிதளமும் ஆதரித்துள்ளன. தேர்தலுக்கு முன்பும் பின்பும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நான் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். இதில், அந்த அமைப்பு பாஜக மீது நெருக்கடி கொடுப்பதையோ, உத்தரவிடுவதையோ நான் எப்போதும் கண்டதில்லை. பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி கொடுக்கிறது என்பது போன்ற தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தெரியவில்லை என்றார் ராஜ்நாத் சிங்.
தேர்தலில் வெல்வோம்: முன்னதாக, மும்பையின் ஜாவேரி பஜாரில் மும்பை ஆபரணச் சங்கத்தின் புதிய கட்டடத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரே மேடையில் அத்வானி-மோடி
ராஜ்நாத் சிங் கூறுகையில், “மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வரும் 25ஆம் தேதி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அந்தக் கூட்டத்தில் அத்வானி, மோடி ஆகிய இருவரையும் நீங்கள் (செய்தியாளர்கள்) பார்க்கலாம்’ என்றார்.
ராஜ்நாத் சிங் கூறியது நடந்தால், குஜராத் முதல்வர் மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவர் அத்வானியுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மோடியை கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்த பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை அத்வானி புறக்கணித்திருந்தார்.