குடிநீர் விற்பனையில் இறங்கியது தமிழக அரசு

amma_drinking_waterதமிழநாடு அரசு புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

சென்னையின் முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு உட்பட, முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் இந்த குடிநீரை விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டு விற்பனையும் இன்று தொடங்கியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு நிலையம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ரயில்வே நிர்வாகத்தால் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், தமிழக அரசு அதை 10 ரூபாய்க்கு விற்க முன்வந்துள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மேலும் ஒன்பது இடங்களில் அரசின் இந்த குடிநீர் உற்பத்தி மையங்கள் படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளன.

தமிழக அரசின் இந்த முன்னெடுப்பை, தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாராமன் வரவேற்றுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தங்களது தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படாது எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். -BBC

TAGS: