தேசத்தின் தேவை வலுவான தலைமை: நரேந்திர மோடி

narendra modiதேசத்துக்கு இப்போது வலுவான தலைமையே தேவை என்று, பாஜகவின் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம், ரேவாரி நகரில் முன்னாள் ராணுவ வீரர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் மற்றும் ஏராளமான முன்னாள் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் மோடி மேலும் பேசியது:

நமது ராணுவம் மதச்சார்பின்மையின் சின்னமாக விளங்குகிறது. ராணுவத்திடம் இருந்து அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்குப் பிரச்னைகள் எல்லையில் இல்லை; அவை தில்லியில்தான் (மத்திய அரசு) உள்ளன. மத்தியில் முன்னின்று வழிநடத்தக் கூடிய ஒருவரின் வலுவான தலைமை இருந்தால்தான், இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க முடியும்.

பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்து வந்த சிலர் நமது வீரர்களைக் கொன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, நாடாளுமன்றத்தில் கூறியது துரதிருஷ்டவசமானது. அது நமது வீரர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அண்டை நாடுகளுடன் பலவீனமான கொள்கையைப் பின்பற்றுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் பிரச்னைகளைச் சந்திக்கிறோம். பாகிஸ்தான் தனது சதித்திட்டங்களைக் கைவிடவில்லை. சீனா ஊடுருவல்கள் மூலம் தனது பலத்தைக் காட்டுகிறது. அந்த நாடு பிரம்மபுத்திரா நதிநீரைத் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. அருணாசலப் பிரதேசத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் விரும்புகிறது.

தில்லியில் ஆட்சிபுரியும் மத்திய அரசு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.

இங்கு இன்று நடக்கும் பொதுக்கூட்டமானது மாற்றத்துக்கான அறைகூவலாகும். சச்சார் கமிட்டியின் பரிந்துரைப்படி இந்திய ராணுவத்தில் மத ரீதியிலான மக்கள்தொகைப் கணக்கெடுப்பை மேற்கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வந்தது.

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்த ராணுவம் பாராட்டுக்குரியது என்றார் மோடி.

வாஜ்பாய், அத்வானிக்குப் பாராட்டு: மோடி தனது உரையில், முன்னாள் பிரதமரும் பாஜகவின் மிதவாதத் தலைவருமான வாஜ்பாயின் பெயரை ஒரு சில முறை குறிப்பிட்டார். தற்போது, பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அதிருப்தியில் இருக்கும் அத்வானியின் பெயரை அவர் ஒரே தடவை மட்டும் கூறினார். தனது ஒரு மணிநேர உரையில் மோடி மேலும் பேசியது:

வாஜ்பாய் மற்றும் அத்வானி வழிநடத்திய மத்திய அரசை நினைவுபடுத்திப் பார்க்கவே நன்றாக இருக்கிறது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு திறமையான தலைமை அவசியம். மத்தியில் பலவீன அரசு இருப்பதால்தான் உலக நாடுகள் இந்தியாவுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்தப் பிரச்னைக்கு தில்லியில்தான் தீர்வு காணப்பட்டாக வேண்டும். மத்தியில் திறன்வாய்ந்த, தேசபக்தி மிகுந்த, மக்களின் நலனைக் கருதும் அரசு அமைந்தால்தான் இப்பிரச்னைகள் தீரும்.

எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் வெட்கமில்லாமல் ஒரு கருத்தைக் கூறினார். “மக்கள் இறப்பதற்காகவே ராணுவத்தில் சேருகிறார்கள்’ என்று அவர் தெரிவித்தார். ராணுவத்தில் உள்ளவர்களின் தியாகங்களை உங்களால் அங்கீகரிக்க முடியாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்காகப் போராடும் வீரர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள்.

“ராணுவத்தில் சேர கனவு கண்டேன்’: நான் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்போது குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ராணுவப் பள்ளி குறித்த விளம்பரத்தை ஒரு நாளிதழில் பார்த்தேன்.

2 ரூபாயைத் திரட்டிக் கொண்டு அப்பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்ப மனுவை வாங்கி வந்தேன். அங்கு படித்து ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற லட்சியக்கனவு எனக்கு இருந்தது. ஆனால், ராணுவப் பள்ளியில் சேர்வதற்கான நுழைவத்தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த தம்மிடம் பணம் இல்லை என்று என் தந்தை கூறினார். இதனால் எனது ராணுவக் கனவு தகர்ந்தது.

என்னை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது ஏற்பட்ட பரவச உணர்வு, இப்போது ராணுவ வீரர்களான உங்கள் முன் நிற்கும்போதும் எனக்கு ஏற்படுகிறது. ஹரியாணாவில் தேவிலால், பன்சிலால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கு (ஹரியாணாவின் ரேவாரி) நான் கடைசியாக வாஜ்பாயுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

இளைஞர்களுக்கு அறிவுரை: மத்தியில் வலுவான அரசு அமையவும் வலுவான நாடு உருவாகவும் இளைஞர்கள் விரும்பினால் அவர்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

எனவே இளைஞர்களும் முன்னாள் ராணுவ வீரர்களும் தங்கள் பகுதியில் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் மோடி.

TAGS: