சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: சல்மான் குர்ஷித் நம்பிக்கை

salman-khurshidசீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இந்திய மற்றும் சீன ஊடகங்கள் இடையே புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்திய-சீன ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:

கடந்த 4 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இரு நாடுகளின் உறவில் அவ்வப்போது சில சிக்கல்கள் உருவானாலும், இரு நாடுகளும் நல்லுறவை பேணி வருகின்றன. உறவை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய-சீன ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய-சீன எல்லை சரிவர வரையறுக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், இரு நாடுகளுக்குள் நிலவும் எல்லைப் பிரச்னை, தீர்வு காணக் கூடியதுதான். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண இரு நாட்டு அரசுகளுமே முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, பிரச்னைகள் குறைந்து அமைதி நிலவும்.

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி பெற்றன. 21-ஆம் நூற்றாண்டில் ஆசிய நாடுகள்தான் அதிவேக வளர்ச்சியை பெற்று வருகின்றன. ஆசிய நாடுகளில் இந்தியாவும், சீனாவும் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்குகின்றன. இரு நாடுகளும் பரஸ்பரம் எதிரியாகக் கருதாமல், ஒற்றுமையுடன் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை மறந்து பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், சீன தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மின்ஜாவோ பேசியது: இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கு சீனாவின் நிலை, மக்களின் கலாசாரம், தகவல் தொடர்பு ஆகியவை குறித்து போதிய அளவு தெரிவதில்லை. அதே போல், சீனாவின் ஊடகங்களுக்கு இந்தியாவை பற்றி மாறுபட்ட புரிதல் இருக்கிறது. இதனால் இரு நாட்டு ஊடகங்களும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவைக் காட்டிலும் பிரச்னைகளையே முன்னிலைப்படுத்துகின்றன. இத்தகைய சூழலை மாற்றுவதற்காகத்தான் இந்திய-சீன ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்த தகவல்கள் இரு நாட்டு பத்திரிகையாளர்களுக்கும் அளிக்கப்படும் என்றார்.

TAGS: