திட்டமிட்ட வழியிலேயே சேதுக்கால்வாய்: இந்திய அரசு

Sethusamudram_img_assist_customசேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று சில இந்து மத அமைப்புக்களாலும் அழைக்கப்படும் மணல்திட்டுக்களை குறுக்குவெட்டாக கடந்து செல்கிறது.

இப்படி சேதுக்கால்வாய் செல்லும் வழியில் தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றுவது, ராமர் பாலத்தை அகற்றி அழிப்பதாகவும், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், புராதான சின்னமான ராமர் பாலத்தை அழிக்கும் செயல் என்றும் கூறி ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சேதுக்கால்வாய் திட்டம் தற்போது நிறைவேற்றப்படும் வழிக்கு பதில், ராமர் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டுக்களை சிதைக்காமல் வேறு வழியில் அமைக்க முடியுமா என்று பரிசீலிக்குமாறு யோசனை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழலியலாளர் ஆர் கே பச்சோரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது சேதுக்கால்வாய் அமைக்கப்படும் வழிக்கு மாற்று வழிகளை பச்சோரி தலைமையிலான குழு ஆராய்ந்து பார்த்தது. முடிவில் மாற்று வழியில் சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற சாத்தியமில்லை என்றும், சேதுக்கால்வாய் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படும் என்றும், சேதுக்கால்வாயால் தென் தமிழ்நாட்டுக்கு பொருளாதார நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் எனவே சேதுக்கால்வாய் திட்டத்தை கைவிடுவதே நல்லது என்றும் பச்சோரி குழு பரிந்துரை செய்திருந்தது.

பச்சோரியின் அறிக்கையை ஏற்று, சேதுக்கால்வாய் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும், சுப்பிரமணியன் சுவாமியும், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த பின்னணியில், பச்சோரியின் அறிக்கை குறித்து தனது நிலைப்பாட்டை இந்திய நடுவணரசு திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தது.

அதில், சேதுக்கால்வாய் திட்டத்திற்காக ஏற்கெனவே 766 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டிய இந்திய அரசு, சேதுக் கால்வாயை ஏற்கெனவே திட்டமிட்ட வழியிலேயே செயற்படுத்த விரும்புவதாக கூறியிருக்கிறது. சேதுக்கால்வாய் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து, இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு செய்யும் பிரசித்தி பெற்ற நீரி அமைப்பு ஏற்கெனவே விரிவாக ஆய்வு செய்து அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்த்து, இந்த கால்வாய் தோண்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்கத்தக்க அளவுக்குள் இருப்பதாக தெரிவித்திருப்பதாகவும், அதை பச்சோரி குழுவினர் கணக்கில் எடுக்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும் சேதுக்கால்வாய் திட்டத்தால் பொருளாதார நன்மைகள் விளையாது என்கிற வாதத்தையும் இந்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது. சேதுக்கால்வாய் திட்டத்தால் உருவாகும் உடனடி நேரடி பொருளாதார பலாபலன்களைத் தவிர, பல்வேறு மறைமுக மற்றும் நீண்டகால பொருளாதார நன்மைகளும் விளைவதாகவும், அவற்றை பச்சோரி குழு கணக்கில் எடுக்கவில்லை என்றும் இந்திய அரசு வாதாடியிருக்கிறது.

சேதுக்கால்வாயால் விளையும் பொருளாதார காரணிகளைத் தவிர, இதில் முக்கியமான பாதுகாப்பு மற்றும் ராணுவ காரணிகளும் அடங்கியிருப்பதாக தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவின் இரு பெரும் கடற்பரப்புக்கும் இடையில் விரைவாக கடற்படையினர் நினைத்த மாத்திரத்தில் சென்று வர சேதுக்கால்வாய் திட்டம் அவசியம் என்றும் வாதிட்டிருந்தது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து சுப்பிரமணியன் சுவாமி மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடுகள் என்ன என்று செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு விரிவான விளக்கம் அளிக்க தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவை என்று சுப்பிரமணியன் சுவாமியும், தமிழக அரசும் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

TAGS: