மத்திய அரசு சிக்கன நடவடிக்கை: சொகுசு விமானப் பயணம், ஆடம்பர ஹோட்டல்களில் கூட்டம் நடத்த தடை

rupeeமத்திய அரசின் நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்கள் நடத்தவும், விமானங்களில் சொகுசு பயணம் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் விவரம்:

நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு துறைகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக செலவிட கூடாது. அனைத்து மத்திய அரசு துறைகளும் புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு கூட்டங்களை தவிர பிற மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

உள்நாட்டு விமான பயணத்தின் போது அதிகாரிகள் சாதாரண வகுப்பில்தான் பயணிக்க வேண்டும். இந்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்தும் அகில இந்திய வானொலி, அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஆகிய அரசு தன்னாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும். அரசின் திட்டமிடாத செலவை 10 சதவீதம் குறைக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த 2008-09 ஆம் ஆண்டிலும் கடந்த நவம்பர் மாதத்திலும் மத்திய அரசு இது போன்ற சிக்கன நடவடிக்கையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: