ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் மானியம்

cash_incentiveஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார், முதல்வர் ஜெயலலிதா. மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக படகுகள் வாங்குவதற்கு தலா ரூ.30 லட்சம் மானியம் மற்றும் ரூ.30 லட்சம் வங்கிக் கடன் ஆகியவற்றை செய்து தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய நாட்டில் தனியார் மீன்பிடி நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 16 தமிழக மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக ஈரான் நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் சென்றதன் காரணமாக, அந்த நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ஈரான் நாட்டு நீதிமன்றம் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அபராதமும், ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், 16 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.

முதல்வரின் தொடர் நடவடிக்கையால், 16 மீனவர்களும் கடந்த 16ஆம் தேதி ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களை மும்பை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்குமாறு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, அவர்களை மும்பை சென்று அமைச்சர் வரவேற்றார்.

முதல்வருடன் சந்திப்பு: ஈரான் நாட்டு சிறையில் இருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் புதன்கிழமை பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அப்போது, 16 மீனவர்களுக்கு மீண்டும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான படகினை வாங்க ஏதுவாக ரூ.30 லட்சம் வங்கிக் கடன் மற்றும் ரூ.30 லட்சம் மானியம் தரவும் உத்தரவிட்டார். இதன்படி, 16 மீனவர்களுக்கு அரசு மானியமாக மட்டும் மொத்தம் ரூ.4.80 கோடி வழங்கப்படும். மேலும் ரூ.4.80 கோடி வங்கிக் கடன் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். இதற்கு மீனவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மீன்வளத் துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TAGS: