கணவர் இறந்ததால் கதறிய 3 மனைவிகள்! தீடீரென உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

shock_001கணவர் இறந்து விட்டதாக வந்த தவறான தகவலை நம்பி கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பெண்கள் கதறி அழுது கொண்டிருந்த போது திடீரென அவர்கள் கணவர் உயிருடன் வந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் துடிக்கவே, ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பொலிசார் இறந்தவரின் விவரம் எதுவும் தெரியாமல் குழம்பி நின்றுள்ளனர்.

அப்போது தான் சம்பவ இடத்தில் கிடந்ததாக கையில் செல்போனோடு வந்திருக்கிறார் ஆட்டோ ஒட்டுனர் ஒருவர்.

சம்பவ இடத்தில் கிடந்த செல்போன் என்பதால் அது மரணமடைந்தவரின் செல்போனாகத் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த பொலிசார் அந்த செல்போனில் பதிவாகியிருந்த கடைசி மூன்று எண்களைத் தொடர்பு கொண்டு செய்தி தெரிவித்துள்ளனர்.

அந்த 3 எண்களிலும் பொலிசார் தொடர்பு கொண்டு பேசியபோது 3 பெண்கள் போனை எடுத்து பேசினார்கள்.

அந்த செல்போனின் சொந்தகாரரின் பெயர் ஜெமினி, முன்னாள் ராணுவ வீரரான அவர் திருவண்ணாமலை மாவட்டம் சீலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

பொலிசார் தொடர்பு கொண்ட 3 பெண்களுமே செல்போன் சொந்தக்காரரின் 3 மனைவிகளாம்.

இதனால், தங்களது கணவர் தான் மரடைப்பால் இறந்து விட்டதாகக் கருதி, கதறி அழுத படி கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர் மூவரும்.

அப்போது எதிர்பாரா விதமாக காணாமல் போன தனது செல்போனைக் கண்டு பிடித்துத் தரும்படி புகார் அளிக்க அதே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் ஜெமினி.

அதுவரை போட்டி போட்டு அழுது கொண்டிருந்த 3 மனைவிகளுக்கும் கணவர் எதிரே உயிரோடு நின்றது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் குழம்பிப் போன பொலிசார் பின்னர் நடந்த தவறை புரிந்து கொண்டனர். ஜெமினி உயிரோடு வந்த சந்தோஷத்தில் இருந்த 3 மனைவிகளோடு, செல்போனையும் பெற்றுக் கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார் ஜெமினி.

இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மாரடைப்பில் இறந்தவர் ஜெமினி இல்லை என்பது உறுதியானபடியால் இறந்தவர் யார்? என்று கண்டுபிடிக்கும் வேலையை பொலிசார் தொடங்கியுள்ளனர்.

TAGS: