அமெரிக்க நிர்பந்தத்துக்கு அடிபணிகிறது இந்திய அரசு!

manmohansingh_pmஅணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, இந்தியாவில் அணு மின்னுற்பத்திக்காக அணு உலைகள் நிறுவும் விஷயத்தில்,நாட்டின் நலனுக்கு எதிராகவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக சர்ச்சை மூண்டுள்ளது.

அணுமின் உற்பத்திக்காக, அயல்நாட்டு நிறுவனங்களின் கூட்டுடன் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் மின் நிறுவனத்திடமிருந்து அணு உலைகள் மற்றும் உதிரிபாகங்களை வாங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அணுமின் வாரிய நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்.) ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது.

இதுபோல் அயல்நாட்டு நிறுவனங்களின் அணு உலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டு, அவற்றில் விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய நஷ்டஈட்டை அணுஉலை மற்றும் உதிரிபாகங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை, 2010-இல் கொண்டுவரப்பட்ட அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு உறுதி செய்கிறது.

இதனால், போபால் விஷவாயு சம்பவத்தைப்போல, இந்தியாவில் நிறுவப்படவிருக்கும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து நேர்ந்தால், அதற்குப் பெருமளவு நஷ்டஈட்டுத் தொகையைத் தர வேண்டுமே? என அமெரிக்க நிறுவனம் கவலைப்படுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஈ. வாஹன்வதி, அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை செயல்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை அணுமின்நிலையத்தை நடத்தும் இந்திய நிறுவனத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின்போது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் என்.பி.சி.இ.எல். நிறுவனம் மேற்கொள்ளும் எந்தவோர் ஒப்பந்தமும், இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என அணுசக்தித் துறை (டி.ஏ.இ.) வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு வரும் 24-ம் தேதி விவாதிக்கும் எனத் தெரிகிறது.

TAGS: