மும்பையில் பயங்கரவாதி தப்பியோட்டம்

terrorist1aஇந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்சல் உஸ்மானி, வழக்கு விசாரணைக்காக மும்பை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர திட்டமிடப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட (எம்.சி.ஓ.சி.ஏ) நீதிமன்றத்துக்கு வெளியே அவர் “காணாமல் போய்’விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

37 வயதாகும் உஸ்மானி, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.30 மணியளவில் தலோஜா சிறையிலிருந்து நவி மும்பையிலுள்ள அமர்வு நீதிமன்றத்துக்கு காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டார். அவருடன் மேலும் 22 கைதிகளும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்றக் கட்டடத்தின் நான்காவது மாடியில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மதியம் சுமார் 2.45 மணிக்கு நீதிமன்றம் கூடியபோது, உஸ்மானியைக் காணவில்லை.

அவரைத் தேடும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஆமதாபாதில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக உஸ்மானியை காவல்துறையினர் கைது செய்தனர். வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றது, குண்டு வைத்தது மற்றும் குண்டு வைக்க முயற்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். மறுநாள் சூரத் நகரில் பயங்கரவாதிகள் பொருத்தியிருந்த 22 வெடிகுண்டுகள், போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

சுமார் ஒரு மாதம் கழித்து, இந்த வழக்கில் அப்சல் உஸ்மானி கைது செய்யப்பட்ட பின்புதான், குண்டுவெடிப்பின் பின்னணி குறித்து எல்லா விவரங்களும் வெளிவந்தன. மகாராஷ்டிரத்திலுள்ள இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைப் பற்றிய பல்வேறு தகவல்களை மும்பை குற்றவியல் காவல்துறையினரிடம் உஸ்மானி தெரிவித்தார்.

மும்பையில் தொடக்கத்தில் கார்த் திருட்டில் ஈடுபட்டுவந்த அப்சல் உஸ்மானி மீது, 1996-ல் கொலை முயற்சி வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி மும்பையில் நிகழ்ந்துவந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பலவற்றிலும் அவரது பெயர் அடிபட்டது.

TAGS: